44

      44. திருமாலும் பிரமனும் சிவனுடைய அடிமுடி தேடிச் சென்ற வரலாற்றில் வள்ளலார் தம் சிந்தையைச் செலுத்துகின்றார். திருமால் திருவடி காண்டற்பொருட்டுப் பன்றியுருக்கொண்டு சென்று வருந்தினார்; திருவடியையும் காணாதொழிந்தார். அவர் திருவாரூரில் பரவையார் மனையில் தலைக்கடையாகவோ வாயிற்படியாகவோ வடிவெடுத்திருந்தால், அங்கே தூதுபோந்த சிவனுடைய திருவடியை நன்கு கண்டிருக்கலாம் என்று இப்பாட்டிற் சொல்லி இன்பம் செய்கின்றார். 

 

2011.

     எம்பரவை யோமண் ணிடந்தலைந்தான் சுந்தரனார்
     தம்பரவை வீட்டுத் தலைக்கடையாய் - வம்பணையாய்
     வாயிற் படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
     மாயப்பெயர் நீண்ட மால்.

உரை:

     மாயன் என்ற பெயரால் புகழ்கொண்ட திருமால் எமது பரந்த மண்ணுலகை ஆடிக்குடைந்து சிவபிரான் திருவடி காண்பதற்கு அலைந்தான்; மற்று அவன் 'சுந்தரமூர்த்திகளின் காதலியாகிய பரவை நாச்சியார் வீட்டுத் தலைக்கடையாகவோ, புதுமையுற்ற அணையாகவோ, வாயிற்படியாகவோ வடிவு கொள்ளும் நேர்பாடு இலனாயினவாறு என்னே? எ.று.

     மாயன் - கரியவன்; மாயம் பல செய்பவன் என்றுமாம். திருமாலுக்குரிய பெயர்கள் பலவற்றுள் மாயன் என்பது ஒன்றாகலின், “மாயப் பெயர் நீண்ட மால்” என்று கூறுகின்றார். “மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” (திருப்பா) என்று சான்றோர் கூறுவது காண்க. வாமனனாய்ச் சென்று பின் வானளாவ நீண்டதுபற்றித் திருமாலை நீண்டவன் என்பது கொண்டு “நீண்டமால்” என்று உரைக்கின்றார். பரவை - பரந்த இடம். எம் பரவை மண் - யாம் வாழும் பரந்த மண்ணுலகம். ஓகாரம்; அசை. சிவனுடைய திருவடியைக் காண்டற்குப் பன்றியுருக் கொண்டு ஆழக்குடைந்து சென்று அடிகாண மாட்டாது வருந்தினமை புலப்படற்கு “மண்ணிடந்தலைந்தான்” என்று புகல்கின்றார் . சுந்தரனார் - சுந்தரமூர்த்தி சுவாமிகள். தெருமுன்றிலைத் “தலைக்கடை” என்கின்றார். படிக்கீழ் அமையும் அணை, வம்பணை எனப்படும். வம்பு -புதுமை. தலைக்கடை, வம்பணை, வாயிற்படி ஆகிய இவ்விடங்கள் செல்வோர் காலடிபடு மிடுங்களாதலால், இவற்றை விதந்து கூறுகிறார். உருமாறி நிலத்தை அகழ்ந்து சென்றும் காணாமைக்கு இரங்கி, திருமால் “வடிவெடுக்க நேர்ந்திலனே” என்று மொழிகின்றார்.

     இதனால், சிவன் திருவடி பரவையார் மனையில் எளிமையாய் நடந்த திறம் கூறியவாறு.