45

      45. பெருமுயற்சியால் அரிய காரியங்கள் நம் உலகியல் நடப்பதுண்டு. செய்து முடித்தவரை வியப்பவர்கள், இதனைச் செய்து முடித்தற்கு இவர் தலையால் நடந்தார் வழக்காம். இது வெறுஞ் சொல் வழக்கேயன்றி வேறில்லை. ஆனால் காரைக்காலம்மையார் கயிலைக்குச் சென்றபோது தலையால் நடந்தார்; உமாதேவியார் கண்டு வியந்தார்; அதுவும் உண்மை வழக்காய்விட்டது என்பார் போல் இப் பாட்டில் அதனை உள்ளுறுத்துப் பாடுகின்றார். 

2012.

     நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள்
     மண்ணில் பழைய வழக்கங்காண் - பண்ணிற்சொல்
     அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால்
     அம்மையார் போனடந்தார் ஆர்.

உரை:

     பண்ணின் இனிமை கொண்ட சொல்லையுடைய அம்மையை இடப்பாகத்தேயுடைய இறைவனே, செருக்குற்றுத் தலையால் நடக்கின்றோமென்பது நாட்டில் எங்களிடையே பழையதொரு வழக்கமாகும்; ஆனால் நடப்பதில்லை; ஆயினும் முன்னாளில் காரைக்காலம்மையார் தலையால் நடந்தார்; அவர் போல நடந்தவர் யாவர் உளர்? கூறுமின். எ.று.

     செருக்கினால் முறையின்றி நடப்பவனைத் தலையால் நடக்கின்றான் என்பது வழக்கு. “புலைய னேனையும் பொருளென நினைந்துன், அருள் புரிந்தனை புரிதலும் களித்துத் தலையினால் நடந்தேன் விடைப்பாகா” (செத்தி) என்று மாணிக்கவாசகர் கூறுவது காண்க. இதனையே, “தலையால் நடக்கின்றோமென்பது எங்கள் மண்ணிற் பழைய வழக்கங் காண்” என்று வள்ளலார் உரைக்கின்றார். “எங்கள் மண்” என்றது, எங்கள் நாடு என்னும் பொருளது. செருக்குண்டாயபோது வழங்குவதாகலின், “நண்ணி” என்று குறிக்கின்றார். பழைய வழக்கமென்பது, சொல்லளவாய் நிற்பதன்றிச் செயல்படுவதன்று என்பது கருத்து. ஆனால், அச்சொல்லையும் செயற்படுத்திய பெருமை எங்கள் காரைக்காலம்மையாரைச் சாரும் என்றற்குக் “காரைக்கால் அம்மையார் போல் நடந்தார் ஆர்” என்று பெருமிதத்துடன் கேட்கின்றார். பழைய சொல்வழக்கும் செருக்குண்டாய போது நிகழ்வது; செயற்படுத்திய எங்கள் அம்மையார் மிக்க பணிவும் பரிவும் தோன்ற நடந்தார் என்ற சிறப்பு விளங்க, உவமையில் வைத்து உயர்த்தி யுரைக்கின்றார். உவமம் உயர்ந்ததன் மேற்றெனக் கொள்க.

     இதனால், தலையால் நடந்தேன் என்ற சொல் வழக்கின் நயம் காட்டியவாறு.