46
46. பாண்டி மன்னற்குக் குதிரை வாங்குதற்காகத் திருப்பெருந்துறைக்கு மாணிக்கவாசகர் சென்றபோது,
அங்கே சிவன் மாணாக்கர்க்கு அறிவு நல்கும் ஆசிரியர் கோலத்தில் வீற்றிருந்தார்; அவரைக்
கண்டு உரையாடிய மாணிக்கவாசகர்க்கு ஆசிரியர் ஞானவுரை வழங்கவும், அவர் மனமாற்றம் எய்திச்
சிவஞானச் செல்வராயினார். கேட்ட மாத்திரையே மனம் மாறிக் கரணம் யாவும் சிவகரணமாகுமாறு செய்த
உரைப்பொருள் யாதாகும் என எண்ணுகின்றார் வடலூர் வள்ளல். சிவபிரானையே கேட்கலுற்று, வேதமுடிவா,
ஆகம முடிவா, நாத முடிவா மாணிக்கவாசகர்க்கு உரைத்த முடிபொருள் யாது என வினவும் நெறியில் இப்பாட்டினைப்
பாடுகின்றார்.
2013. வேத முடிவோ விளங்கா கமமுடிவோ
நாத முடிவோ நவில்கண்டாய் - வாதமுறு
மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க
வாசகர்க்கு நீஉரைத்த வாறு.
உரை: வாதத்துக்கு இடமாகிய பெரிய உலகவாதனையில் கிடப்பவர் மனத்திற்குள் நில்லாத மாணிக்க மணிச்சுடர் போலும் சிவபெருமானே, மாணிக்க வாசகப் பெருமானுக்கு அன்று குருந்தமா நீழலில் இருந்து நீ உபதேசித்த ஞானப்பொருள் வேதத்தின் முடிபொருளோ, விளங்குகின்ற சிவாகம முடிபொருளோ, நாத முடிவில் உள்ள பொருளோ, தெரிவித்தருள்க, எ.று.
மாசகன் - பெரிய உலகியல் வாதனைக்குள் அழுந்திக் கிடப்பவன். உலகியலுணர்த்தும் அரசியல், பொருளியல், வாழ்வியல் அனைத்தும் வாதப் பிரதிவாதங்களால் முடிவு காணப்படுவனவாதலால், “வாதமுறு மாசகன்” என்று கூறுகின்றார். உலகியல் வாழ்வுக்கு வேண்டுவனவும் வேண்டாதனவும் பற்றிய நினைவும் சொல்லும் செயலும் உலகியல் வாதனை எனப்படும். சகவாதனை யுற்றோர்க்குச் சமயவுணர்வும் ஒழுக்கவும் பொருளாவதில்லையாதலால், அவர் மனத்துள் சிவவுணர்வு இடம் பெறலில்லாமை கண்டு, “மாசகற்குள் நில்லா மணிச் சுடரே” என்று குறிக்கின்றார். மணிவகை ஒன்பதனுள் மாணிக்கமணி செம்மணி; சிவனது திருமேனி அம்மணியின் நிறமுற்று அதற்கில்லாத ஞானவொளியுற்றுத் திகழ்வதால் “மாணிக்க மணிச் சுடரே” என்று பரவுகின்றார். மாணிக்கவாசகப் பெருமான் பாண்டியற்கு அமைச்சராய் அவர் பொருட்டுக் குதிரை வாங்குதற்குத் திருப்பெருந்துறைக்குச் சென்றபோது, அங்கே குருந்த மரத்தின் கீழ்ச் சிவபெருமான் ஞானகுருவாய் எழுந்தருளியிருந்து ஞானப் பேருரை நிகழ்த்திய வரலாற்றை நினைந்து, “மாணிக்கவாசகர்க்கு நீயுரைத்தவாறு” என்று நயந்து கேட்கின்றார். சிவகுரு அறிவுறத்த ஞானப் பொருள் வேதாந்தமா, ஆகமாந்தமா, நாதாந்தமா, யாதாம் என்பார். “வேதமுடிவோ விளங்காகம நாதமுடிவோ நவில் கண்டாய்” என்று விண்ணப்பிக்கின்றார். வேதாந்தம் பலரும் பலவேறு வகையில் பொருள் விரிக்கத்தக்க தெளிவில்லாத தென்றும், ஆகமாந்தம் தெளிவுமிக்க தென்றும் சான்றோர் கூறுதலால், வேதமுடிவோ எனப் பொதுப்பட மொழிந்து “விளங்கு ஆகம முடிவோ” என்று சிறப்பித்துரைக்கின்றார். “வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறம்” என்று உமாபதி சிவனாரும், “வேதசாரம் இதம் தந்தரம் சித்தாந்தம்” என்று மகுடாகமமும் கூறுவது காண்க. மாயாகாரியமான தத்துவம் முப்பத்தாறனுள் சுத்த மாயா காரியத்தின் உச்சியிலுள்ளது நாததத்துவம்; மாயாமண்டலத்துக்கப்பால் நாதத்தின் உச்சிக்கு மேலது பரசிவமாதலின் அதனை“நாத முடிவு“ என்றும், “நாதாந்தம்” என்றும் கூறுப. அதற்குரிய ஞானம் பரஞானமாதலின், அது குறித்து நாதமுடிவாகிய பரஞானமோ நீ உபதேசித்தது, உரைத்தருள்க என்று வேண்டி நிற்கின்றார்.
இதனால், திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகப் பெருமான் பெற்ற சிவஞானத்தின் இயல்பு ஆராய்ந்தவாறாம்.
|