47

      47. செயற்கரிய செய்பவர் பெரியர். பிள்ளைக்கறி சமைத்தளித்த பெருஞ் செயற்குரியவர் சிறுத்தொண்டர். இவரைப் பெருந்தொண்ட ரென்னாது சிறுத்தொண்டரென்பது வழக்காவுளது. இதற்கு நாங்களே ஒரு தீர்வு காண்பது வழக்கம். இங்கே செய்தது ஒரு தொண்டே; செய்தவரும் ஒருவரே; ஒன்றைக்காட்டி இது பெரிதோ சிறிதோ என வினவுவது வழு; அம்முறையில் சிறுத்தொண்டரைப் போல் வேறு யாவர் இத்தொண்டினைச் செய்தார்? ஒருவரும் இல்லை; இதுபோல் அரிய தொண்டும் இல்லை; ஆதலால் சிறுத்தொண்டரென்பது என்னை என்று எங்களிடையே ஒரு வழக்கு இருந்துவருகிறதென வள்ளலார் ஒரு நயவுரையை இப்பாட்டின்கண் தொகுத்துப் பாடுகின்றார். 

2014.

     ஆர்கொண்டார் சேய்க்கறியிட் டாரே சிறுத்தொண்டப்
     பேர்கொண்டார் ஆயிடிலெம் பெம்மானே - ஒர்தொண்டே
     நாய்க்குங் கடைப்பட்ட நாங்களென்பேம் எங்கள்முடை
     வாய்க்கிங் கிஃதோர் வழக்கு.

உரை:

      தன் மகனைக் கறியாகச் சமைத்திட்ட பரஞ்சோதியாரே சிறுத்தொண்டர் என்று பேர்பெற்றாராயின், பெரிய தொண்டர் என்று பெயர் பெற்றார் ஒருவரும் இலர்; எங்கள் பெருமானே, சிறுத்தொண்டர் எனத் தானும் வேறு யார் பெற்றார். இதனை எண்ணாது, அவர் செய்தது இஃது ஒரு தொண்டே என்று நாயினும் கடைப்பட்ட நாங்கள் உரைத்து ஒன்றைக் கொண்டு பெருமை சிறுமை கூறுவதெங்ஙனம் என்று இங்கே எங்கள் முடைநாறும் வாயால் கூறுவது ஒரு வழக்கமாகவுளது. எ.,று.

     தொண்டரது தொண்டின் அளவைச் சீர்தூக்கிக் காண்பது தொண்டரல்லாத எங்கட்குப் பொருந்தாத செயல். நாயினும் கடைப்பட்டவராதலால் நாங்கள் சீர்தூக்கலுற்று, அவர் செய்தது ஓர் தொண்டே என்பேம் என்பாராய், “நாய்க்கும் கடைப்பட்ட நாங்கள் ஓர் தொண்டே என்பேம்” என்று கூறுகின்றார். பொருந்தாச் செயலைச் செய்வதுபற்றி “நாய்க்கும் கடைப்பட்ட நாங்கள்” என்றும் இழித்துரைக்கின்றார். சேய்க் கறியிட்ட பெரியாரைச் சிறு தொண்டர் என்பது எங்ஙனம் என்றெழும் ஐயவினாவுக்கு, அவர் செய்தது ஒரு தொண்டேயாதலின், சிறுத்தொண்டர் என்ற பெயர் கொண்டது பொருத்தம் என்பாராய், அவர் செய்தது “ஓர் தொண்டே என்பேம்” என்றும், ஒருவிரல் காட்டி நெடிதோ குறிதோ என்றல்போல் ஒரு தொண்டைக் கண்டு சிறுத்தொண்டை ரென்றல் பொருந்தாது என்பது எங்கள் வழக்கு என்றற்கு “எங்கள் முடைவாய்க்கு இங்கு இஃது ஓர் வழக்கு” என்றும் இயம்புகின்றார். அவ்வழக்கு நேரிதன்று என மறுத்தற்குச் “சேய்க்கறி யிட்டாரே சிறுத்தொண்டப் பேர் கொண்டாராயிடில்” என்றும், இத்தகைய தொண்டைத் தானும் வேறு எவரும் செய்திலராதலின், இது சீர் தூக்குதற்கு ஆகாத பெருமை யுடையதென்பாராய், “ஆர்கொண்டார்” என்றும் உரைக்கின்றார். ஓர் தொண்டாயினும் ஒப்பற்ற உயர்தொண்டென்பது அறிக. “ஓர் தொண்டே” என்பது, உயர்வானம் என்றாற்போல வழங்கிவருகிறதெனக்கொள்க. செயற்கருஞ் சிறப்பு நோக்கிப் பட்டினத்தார் “வாளால் மகவரிந்தூட்ட வல்லேனல்லேன்” எனத் தலைமை தோன்றக் கூறுவது காண்க.

     இதனால், சிறுத்தொண்டர் என்ற பெயர் நலம் ஆராய்ந்து வியந்தவாறாயிற்று.