48
48. சிவன் திருப்பெயரை ஓதி வாழ்த்துவது அனைவர்க்கும் கடன். அது செய்யாது குற்றப்படின் யாரும்
பொறுக்க முடியாது; அதனால் நஞ்சு குடித்து இறப்பதா? வாளால் வெட்டுண்டு சாவதா? யாது செய்வது தக்கதெனத்
தமக்குத் தாமே சொல்லி இப்பாட்டால் பெருவருத்தம் கொள்ளுகின்றார் வடலூர் வள்ளற்பெருமான்.
அதனைக் காண்மின்.
2015. கோள்கொண்ட நஞ்சங் குடியேனோ கூர்கொண்ட
வாள்கொண்டு வீசி மடியேனோ - கீள்கொண்ட
அங்கோவ ணத்தழகா அம்பலவா நின்புகழை
இங்கோதி வாழ்த்தாத யான்.
உரை: கீளொடு பிணித்த கோவணம் அணிந்த அழகனே, அம்பலத்தாடும் பரமனே, நின் புகழை இவ்வுலகில் பலர் அறியச் சொல்லி வாழ்த்தாத நான், சொல்லுதலைக் கொண்ட விடம் அருந்தேனோ, கூர்மையான வாளால் வெட்டிக்கொண்டு சாகேனோ, வாழ்வதில் பயனில்லை யாதலால், எ.று.
சிவக்கோலத்துக்குக் கீளும் கோவணமும் அழகு தருதலால், “கீள் கொண்ட அங்கோவணத் தழகா” என்றும், அம்பலவாணனென்பது பற்றி, “அம்பலவா” என்றும் கூறுகின்றார். இவ்வுலகியல், தான் தரும் போகங்களில் ஆழ்த்தி மக்களைச் சிவனை மறக்கச் செய்தலால், இங்கே ஓதுவது சிறப்பென்பதனால் “இங்கு ஓதி” என்றும், வாழ்த்தாமை குற்றமாதலால் “வாழ்த்தாத யான்” என்றும், வாழ்த்தாமை குற்ற மாதலால் “வாழ்த்தாத யான்” என்றும் உரைக்கின்றார். உண்டாரைக் கொல்லுவது நஞ்சுக்கியல்பாதலால் “கோள் கொண்ட நஞ்சம்” என இயம்புகின்றார். கோள் - கொலை. நஞ்சு குடித்திறத்தலினும், வாளால் வெட்டிக் கொண்டுக் கொண்டு மடிவது, நோயை குறைத்துச் சாவு விரைந்தெய்தச் செய்தலால், அதனை விதந்து, “கூர் கொண்ட வாள்கொண்டு வீசி மடியேனோ” என்று உரைக்கின்றார். சிவனை மறந்து வாழ்த்தாது உலகில் உறைவது பயனில் செயலாதலால் இறத்தல் நன்றெனப் புலம்புகின்றார்.
இதனால், சிவன் திருப்பெயரை ஓதி வாழ்த்தாமல் உலகில் வாழ்தலினும் இறத்தல் நன்றென உரைத்தவாறாம்.
|