49
49. வேண்டுவார்க்கு வேண்டும் அருளை வழங்குவதில் ஒரு சிறு குறையும் இல்லாதவன் சிவபிரான்.
“வேண்டத்தக்க தறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ” நீ என்று மாணிக்கவாசகர் சிவனது
வள்ளன்மையைப் பாராட்டிக கூறுகின்றார். அப் பெருமானிடம் குறையிரந்து வேண்டாமை நமது குறை.
இதனை நினைவு கூர்ந்த வள்ளலார் சிவனை நோக்கி அருள் செய்வதில் நின்பால் குறையில்லை; குறையெல்லாம்
என்பால் உளது; இரந்து கொள்ளாமை என் குறை” என இப்பாட்டில் உரைத்து விண்ணப்பிக்கின்றார்.
2016. ஆயாக் கொடியேனுக் கன்புடையாய் நீஅருளிங்
கீயாக் குறையே இலைகண்டாய் - மாயாற்கும்
விள்ளாத் திருவடிக்கீழ் விண்ணப்பம் யான்செய்து
கொள்ளாக் குறையே குறை.
உரை: அன்புடைய பெருமானே, ஆராய்ச்சியில்லாத கொடுமையுடைய எனக்கு, இங்கே நீ அருள் செய்யாத குறையே கிடையாது; மாயனாகிய திருமாலுக்கும் சொல்லவியலாத நின் திருவடிக்கீழ் யான் விண்ணப்பம் செய்துகொள்ளாத குறையே அடியேன்பால் குறையாகும். எ.று.
அன்பே சிவம் என்பவாகலின், அன்பு வடிவாய சிவனை 'அன்புடையாய்' என உரைக்கின்றார். ஆய்தற்குரிய அறிவு பெற்றிருந்தும் அதனைச் செய்யாது கோடிய நெறியிற் செல்கின்றேன் எனத் தனது கொடுமையை யுணர்ந்து கூறலின் “ஆயாக் கொடியேன்” எனத் தம்மை நொந்து வள்ளலார் கூறுகின்றார். அறிகருவிகளும் செயற்கருவிகளும சிறிதும் பிழையாது தொழிற்பட அருள்புரிந்தவண்ணம் சிவன் இருப்பதை யுணர்ந்து கூறுகின்றாராதலால், “நீ இங்கு அருள் ஈயாக் குறையே இல” என உரைக்கின்றார். அவன் அருளின்றி ஓர் அணுவும் அசையாமையறிந்தவர் சிவனைக் குறை கூறார் என உணர்க. மாயன் என்பது மாயான் என வந்தது. திருமாலும் காண்டற் கரிதாயினமைபற்றி “மாயாற்கும்விள்ளாத் திருவடி” என்று இசைக்கின்றார். விள்ளல் - சொல்லுதல். விளங்குதல் என்று கொண்டு மாயனான திருமாலுக்கும் விளங்காத திருவடியென்றலும் ஒன்று. வேண்டுவார் வேண்டுவ தீயும் வள்ளல் என்பதை ஆய்ந்துணராமையால் சிவபிரான் திருவடிக்கீழ் விண்ணப்பம் செய்துகொள்ளாமல் குறைபட்டதை நன்கு குறிப்பதற்காகத் “திருவடிக்கீழ் விண்ணப்பம் யான் செய்து கொள்ளாக் குறையே குறை” என்று கூறுகின்றார்.
இதனால், சிவனுடைய வள்ளன்மையை வியந்து கூறி, அவன் திருவடிக்கீழ் விண்ணப்பம் செய்துகொள்ளாமை யாகிய குறையை நினைந்து கூறியவாறு.
|