50

      50. சிவனை நினைந்த வள்ளலார், அவனை முன்னிலைப்படுத்தி, “சிவனே, பெற்ற தாய்க்குள்ள தம்மை நினக்குண்டு என்பேன்; இனி அவ்வாறு கூறுவது பொருந்தாது, பெற்ற தாய் வேறுவேலை செய்யும் போது பிள்ளையழுதால் கேட்டுக்கொண்டு வேலை முடிவு நோக்கிச் சிறிது பொறுத்துப் பின்னர் வருவாள்; எங்கட்கருள வேண்டிய நிலைமை தோன்றின் நின்னினும் நின் திருவடி பொறுத்தலின்றி விரைந்து வந்தருளும் இயல்பினது” என இப் பாட்டில் எடுத்து மொழிகின்றார்.

2017.

     பெற்றிடுதாய் போல்வதுநின் பெற்றியென்பேன் பிள்ளையது
     மற்றழுதால் கேட்டும் வராதங்கே - சற்றிருக்கப்
     பெற்றாள் பொறுப்பள் பிரானீ பொறுக்கினுநின்
     பொற்றாள் பொறாஎம் புலம்பு.

உரை:

     சிவபிரானே, நின் திருவடியானது அருளும் தன்மையில் பெற்றளிக்கும் தாய்போல்வது என்று சொல்வேன்; எனினும், பெற்ற தாய்க்கில்லாத தனிச் சிறப்பு நின் திருவடிக்குண்டு; பெற்றவள் தன் பிள்ளை யழுமாயின் கேட்டும் உடனே வாராது சிறிது பொறுத்து வருவாள்; அவளைப்போல் நீ பொறுத்தாலும் நின் அழகிய திருவடி எங்கள் புலம்பலைக் கேட்டுச் சிறிதும் பொறுக்காது காண். எ.று.

     திருவடிக்கும் சிவனுக்கும் உள்ள ஒற்றுமை நயம்பற்றிப் “பெற்றிடு தாய் போல்வது நின் பெற்றி யென்பேன்” என்று உரைக்கின்றார். பெற்றி - தன்மை. அஃதாவது பிறர்க்கு அருள் செய்யும் தன்மை. பிள்ளையோரிடத்தேயிருந்து அழுமாயின், அதன் குறை தீர்க்கும் தாய் அது நிற்குமிடத்துக்கே சென்று சேர்வளாதலின், “அங்கே” என்று குறிக்கின்றார். தன்பால் வாராமையால் சிறிது காலம் தாழ்க்கினும் சென்று சேர்வது திண்ணமாதலால் “சற்று இருக்கப் பொறுப்பாள்” என்று இயம்புகின்றார். நீ பொறுக்கினும் நின் திருவடி பொறாது என்பது வேற்றுமை நயம்பட மொழிவது. புலம்பு - தனித்திருந்து புலம்புதல்.

     இதனால், உயிர்கட்கு அருள்புரியும் வகையில் இறைவன் திருவடி தாயினும் சாலப் பரிவுடையது என்றவாறு.