51
51. பொறுமையுள்ளார்
புவியாள்வர், போகம் பெறுவர் என்பர்; சமய நெறி நிற்போர், பொறுமை நிறைந்தவர் உள்ளத்தில்
இறைவன் இருந்தருள்வான் என்று கூறுவர். அஃது உண்மையுரையாயின், நானும் மிக்க பொறுமையுடையவனாதலால்,
என் மனத்திலும் நீ எழுந்தருளல் வேண்டும் எனத் தெரிவிக்கின்ற வடலூர் வள்ளல், தமது பொறுமையை
விளக்குகின்றார். உலக வாழ்வு தரும் போகம் துன்பம் பயக்கும் புன்மையுடையதாயினும் யான் அதனை
வல்லவாறு நுகர்கின்றேன்; மிக்க சினங் கொண்டு ஆணவம் செய்யும் இன்னாமைகளை ஏற்றுப் பொறுக்கின்றேன்.
என் பொறுமை, பொன்னிலும் மேம்பட்டது; இத் துறையில் என்னைப் போற் பொறுமையுடையவர்
யாருமில்லை; என்னுள் எழுந்தருள்க என வேண்டுகின்றார்.
2018. பொன்போல் பொறுமையுளார் புந்திவிடாய் நீஎன்பார்
என்போல் பொறுமையுளார் யார்கண்டாய் - புன்போக
வல்லாம் படிசினங்கொண் டாணவஞ்செய் இன்னாமை
எல்லாம் பொறுக்கின்றேன் யான்.
உரை: பொன்னைப் போல் பொறுமையுடையவர் மனத்தினைவிட்டு நீ ஒருகாலும் நீங்காய் என்று அறிந்தோர் சொல்கின்றார்கள்; என்னைப் போல் பொறுமையுடைவரும் வேறு யாவர் இருக்கின்றார்கள்; எங்ஙனமெனில் புல்லிய போகங்களை வல்லவாறு நுகர்ந்து சினத்துடன் ஆணவமாகிய மலவிருள் செய்யும் துன்பமனைத்தையும் நான் பொறுக்கின்றே னன்றோ? ஆகவே, என்னின் நீங்காதிருக்க வேண்டுகிறேன், எ.று.
எத்தனை முறைக் காய்ச்சி எப்படி அடிக்கினும் நிறமும் ஒளியும் கெடாதமை பற்றிப் பொறுமைக்கு எல்லையாகப் பொன்னைக் கூறுகின்றார்கள்; அதனால் “பொன்போற் பொறுமையுளார்” என்றும், அவர் சிந்தையை இடமாகக் கோடலால், “புந்திவிடாய் நீ என்பார்” என்றும் இயம்புகின்றார். பொறுக்கலாகாத கீழ்மைப்பட்ட போகத்தைப் “புன்போகம்” எனவும், தன் வன்மை முற்றும் செலுத்திப் பொறுத்து வல்லவாறு நுகருமாறு புலப்பட, “வல்லாம்படி” எனவும் இசைக்கின்றார். வல்லவாம்படி என்பதை வல்லாம்படி என்று கூறுகின்றார். ஆணவமலம் துன்பம் விளைவிப்பதைச் சினந்து செய்வதுபோலக் கூறுவது இலக்கணை. நினது நீங்கா இருப்புக்குப் பொறுமை காரணமாயின் என்பாலும் அஃது இருத்தலால் என்னை விட்டு நீங்காமை வேண்டும் என்பது குறிப்பு.
இதனால், ஆணவத்தின் பொறுக்கலாகாத தீமை கூறி, அதன் நீக்கத்துக்கு என்னோடு உடனிருந்து அருளல் வேண்டும் என்றவாறாம்.
|