52
52. சுந்தரமூர்த்திகளைத் திருமண காலத்தில் தடுத்தாட்கொண்ட வரலாற்றை வடலூர் அடிகள் நினைக்கின்றார்.
அதே நிலையில் ஆட்கொண்ட சிவனை நினைந்து, “பெருமானே எனக்குத் திருமணம் நடந்த போது நீ வரவில்லை;
நின்னைச் சூழ்ந்திருக்கும் கணங்களில் ஒன்று வந்து என்னை அழைக்குமாயின், இப்போது வேறு மணம்
செய்துகொள்வேன், என்ன சொல்லுகின்றாய்” என்று இப் பாட்டில் கேட்கின்றார். இறைவனால் தடுத்தாட்கொள்ளப்படுவது
பெரியதொரு சிறப்பென்பது வள்ளலார் கருத்து.
2019. முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல்
என்மணத்தில் நீவந் திடாவிடினும் - நின்கணத்தில்
ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி
இன்றும் ஒருமணஞ்செய் வேன்.
உரை: முன்னாளில் சுந்தரருடைய திருமணத்திற்கு நீயே வலிந்து முன்சென்று அவரைத் தடுத்து ஆட்கொண்டதுபோல் என் திருமணத்திற்கு நீ வாராயாயினை; ஆயினும் இப்போது நின் கணங்களில் ஒன்று, ஒரு கணநேரம் வந்திருந்து என்னை வாவென்றழைக்குமாயின், முன் செய்ததேயன்றி யான் இன்றைக்கே வேறு ஒரு மணம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்வேன், எ.று.
சுந்தரமூர்த்திகட்குத் திருமணம் நடந்தபோது சிவபெருமான் வேதியர் வடிவில் ஒருவரும் அழையாதிருக்கவும் தாமே வலிதிற் சென்று வல்வழக்கிட்டு ஆட்கொண்ட செய்தி நாடறிந்ததாகலின், “முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவிற் கொண்டது” என்று குறித்துரைக்கின்றார். வள்ளலார் திருமணம் ஒரு கலக்கமுமின்றி இனிது நடந்ததென அவர் வரலாறு கூறுகிறது; அவரும் என் மணத்தில் “நீவந்திடா விடினும்”என்று உரைக்கின்றார். சிவனைச் 'சூழவிருப்பண சிவகணம் என்பர்; அவற்றுட் பேய்களும் உண்டு. “பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம்” (அற்புத) எனக் காரைக்காலம்மையார் கூறுவது காண்க. நீ வாராது நின் கணங்களிலொன்று வந்தாலே போதும் என்பார், “நின்கணத்தில் ஒன்று” எனவும், அதுதானும் நெடிதிருக்க வேண்டா, ஒருகணப்போது இருந்துவிட்டு அழைத்தால் அமையும் என்றற்கு, “ஒருகணம் உற்று அழைக்கின்” எனவும் கூறுகின்றார். சுந்தரரைத் தடுத்தாண்ட செயலில் தமக்கிருக்கும் பெருமதிப்பை வள்ளலார் இதனால் வெளியிடுகின்றார்.
இதனால், இவ்வாற்றால் சுந்தரர்பால் கொண்டிருந்த அருளிப்பாட்டினை வள்ளலார் வியந்தவாறு காணலாம்.
|