54

      54. உமை பங்கினனாய் இருக்கும் சிவனது மெய்ம்மை நிலையை நோக்குகின்றார் வள்ளலார். என்னிடத்தோ, என் மனத்தின்கண்ணோ பங்கேற்றிருக்கலாம்; இராமல், உமைபங்கனாய் இருப்பதற்கு என்பால் பிழையிருக்க வேண்டும். பிழை என்னிடத்திலோ என் மனத்திலோ மனத்தைப் பற்றியிருக்கும் மாயையிலோ எங்குளதோ தெரியவில்லையே யென வருந்துகின்றார். வருத்தம் இப்பாட்டுருவில் வெளிப்படுகிறது.

2021.

     என்பாலோ என்பால் இராதோடு கின்றமனத்
     தின்பாலோ அம்மனத்தைச் சேர்மாயை - தன்பாலோ
     யார்பால் பிழையுளதோ யானறியேன் என்னம்மை
     ஓர்பால் கொளநின்றோய் ஓது.

உரை:

     என் தாயாகிய உமையம்மை ஒருபால் கொள்ள நின்ற பெருமானே! ஆன்மாவாகிய என்பால் உளதா? என் வழி நில்லாமல் ஓடுகின்ற என் மனத்தின்கண் உளதா? அந்த மனத்துக்கு முதற்காரணமான மாயையிடத்தே உளதா? பிழை யாவரிடத்தே யுளது? யான் அறிந்திலேன், அருள் கூர்ந்து சொல்லுக. எ.று.

     உமையொடு கூடி உலகளிக்கும் பரம்பொருளாதலின், உமையம்மையை ஒரு கூறாக வுடையவனே என்று சொல்லவந்த வள்ளற் பெருமான், அம்மைக்கும் தமக்கும் உள்ள தொடர்பு விளங்க, “என் அம்மை ஓர்பாற் கொள நின்றோய்” என்று உரைக்கின்றார். உனது திருவருள் விளக்கம் எய்தாமைக்கு ஏதுவாகிய பிழை எங்கேயுளது என்று அறிய முயன்றேன்; முதற்கண் உயிராகிய என்னை ஆராய்ந்ததில், என்னை இயக்குவது மனமென்று கண்டேன்; மனத்தை நோக்கியபோது அஃது ஒரு கணமும் என்னிடத்தே நில்லாதே ஓடுவது கண்டேன்; அதனுடைய ஓட்டம், முதற் காரணமான மாயையைக் காட்டிற்று; மாயையிடத்து ஒன்றும் அறியமுடியவில்லை. அது கண்ட வள்ளற் பெருமான், “என்பாலா, என்பால் இராது ஓடுகின்ற மனத்தின்பாலா, அம்மனத்தைச் சேர்மாயை தன்பாலா பிழையர்பால் உளது” என்று கேட்கின்றார். தன்னால் அறிய மாட்டாமை இனிது விளங்க, “நான் அறியேன்” எனவுரைக்கின்றார். மனம் அறிதற்கும் செய்தற்கும் அமைந்ததொரு நுண்கருவியாய், எஞ்ஞான்றும் புலன்களை நாடியோடுவதே இயல்பாய், உயிர் முன்னன்றித் தனித்துச் செயற்படாத அசேதனமாய் இருத்தலின் அதன் பிழை சேதனமான உயிரைச் சேராதென அறிக. மாயையும் அசேதனமே யாதலால், பிழை, சேதனமான உயிரிடத்தே இருத்தல் வேண்டும் என்பதாம். அது பற்றியே பிழை எதன்பால் உளதென்னாது “யார்பால் பிழையுளது” என்று வினவுகின்றார். பிழையைச் செய்வதும் தவிர்வதும் சேதனமான உயிராயின், அதனைப் பிழையின்றி யுய்யுமாறு அருள் புரிக என்பாராய், “ஓது” என உரைக்கின்றார்.

     இதனால், தன்பால் பிழையுண்மை கண்டு அது நீக்கி உய்திபெற அருள வேண்டும் என உரைக்குமாறு பெற்றாம்.