55

      55. துன்பங்கள் வந்து சுடச் சுடத் தாக்குவதைக் காண்கின்ற வள்ளற் பெருமான், இது குற்றம் புரிந்தார்க்குத் தரப்படும் தண்டனை, இத் தண்டனை பெறுதற்கு தான் செய்த குற்றம் யாதெனத் தம்மையே ஆராய்கின்றார். நல்லது செய்தற்கு நாணுவது அவம்; தீயது செய்ய நாணுவது நலம். நலம் செய்யத் தடுக்கும் அவநாணம் ஆகிய குற்றம் என்னிடம் உளது; ஆணவமாகிய குற்றமொன்று வேறேயுளது. இவ்விரண்டையும் நான் அறியவில்லை. என்னை அறியாமல் குற்றம் செய்து என்னைத் தண்டனைக் குட்படுத்துகின்றன. அருளாளனாகிய நீ பிழை நிலையை நோக்கி ஆதரித்தல் வேண்டுமென்று இப் பாட்டால் இறைஞ்சுகின்றார்.

 

2022.

     நாணவத்தி னேன்றனையோ நாயேனை மூடிநின்ற
     ஆணவத்தை யோநான் அறியேனே - வீணவத்தில்
     தீங்குடையாய் என்னஇவண் செய்பிழையை நோக்கிஅருட்
     பாங்குடையாய் தண்டிப் பது.

உரை:

     அருளே புரியும் தகவுடைய பெருமானே, நல்லதற்கு நாணும் அவநாணமுடைய என்னையோ, நாய்போன்ற என்னை மூடி நின்ற ஆணவத்தையோ நான் அறிகின்றிலேன்; அவமாயவற்றை மேற்கொண்டு தீங்கு புரிபவனாயினாய் என்று இங்கே யான் செய்யும் பிழைகளை பார்த்துத் தண்டிப்பது வீண். எ.று.

     அருளூருவாய சிவனுக்குச் செயல் அருளல்ல தில்லையாதலால், “அருட் பாங்குடையாய்” என்று முறையிடுகின்றார். இழிசெயல் புரிதற்கும் அதனைப் பிறர் செய்வது காண்டற்கும் நாணுவது நாணம்; நற்செயற்கு நாணுவது அவநாணம்; அது நாணவம் என மாறி நின்று நாணாகிய அவம் எனப் பொருள்படுகிறது.

     இதனால், நாயேனைத் தண்டிப்பதை விடுத்து அருள் புரிதல்வேண்டுமென இரந்து கேட்குமாறாயிற்று.