56
56. குற்றமிலார்க்கு இன்பமே யருளுவது இறைவன் இயல்பு. குற்ற முடையாரையும் தனது அருட்குணத்தால்
பொறுப்பது அப் பெருமான் செயல் என்பதை வள்ளலார் நினைக்கின்றார். குணங்குற்றம் என்ற இரண்டும்
மக்கள்பால் உள்ளன. எனினும், குணங்கண்டு பாராட்டுதலினும் குற்றங்கண்டு பொறுத்தல் பெரியோருடைய
பெருமைப் பண்பு. எட்டி மரம் பெருங் கசப்புடைமையாகிய குற்றமுடையது; அதன்மேற் பட்டு வரும் காற்றும்
கசக்கும் என்பர். அதனால் எட்டி மரம் காய்க்கினும் காயாதொழியினும் பயனில்லை என்று உலகவர்
கூறுவர். என்றாலும், அது பச்சென்று தழைத்திருக்கக் காண்பரேயன்றி வெட்டியழிக்க யாரும்
விரும்புவதில்லை. அதுபோல் அடியேனும் குற்றம் பெரிதுடையனாயினும் அஞ்சி வீணே மனம் நலிய வேண்டா.
நீயும் அருளப்படுவாய் என்றால் போதும் என் வேண்டுகின்றார்.
2023. எச்சம் பெறுமுலகோர் எட்டிமர மானாலும்
பச்சென் றிருக்கப் பகர்வார்காண் - வெச்சென்ற
நஞ்சனையேன் குற்றமெலாம் நாடாது நாதஎனை
அஞ்சனையேல் என்பாய் அமர்ந்து.
உரை: நாதனே, எச்சத்தை விரும்பும் உலகவர் எட்டிமரமாயினும் அது பச்சென்றிருப்பதையே விரும்பி யுரைப்பார்கள்; கண்டார் வெறுக்கத் தக்க நஞ்சு போன்றேனாயினும்., என குற்றமெல்லாம் பாராது என்பால் அருள்கூர்ந்து அஞ்சாதே, மனம் வருந்தி நையாதே என்று சொல்லியருள்க். எ.று.
எச்சம் - ஒருவர்க்குப் பின் நீடித்திருப்பது. ஒருவருடைய பெயரோ புகழோ அவர் இறந்தபின்னரும் நிலைப்பெறுமாயின், அது அவரது எச்சம் எனப்படும். அவர்க்குப் பின் எஞ்சி நிற்பதனால், அஃது எச்சம் எனப்படுகிறது. ஒரு குடும்பத்தில் வாழையடி வாழையெனத் தோன்றும் மக்களையும் 'எச்சம்' என்பர். தனக்குப்பின்னே ஓர் எச்சம் உண்டாதல் வேண்டும் என்பது உலகில் வாழும் மக்கட்கு இயல்பு. “எச்சம் என்றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப்படாதவன்” எனப் பொதுவாகவும், “இசை என்னும் எச்சம்” என்று சிறப்பித்தும் திருவள்ளுவர் உரைப்பது காண்க. எச்ச வகையுள் எதையும் விரும்பாதவர் உலகத்தின்மையின், “எச்சம் பெறும் உலகோர்” என்று கூறுகின்றார். எட்டிமரமாயினும், பச்சென்றிருப்பதையே எவரும் விரும்புவர்; பச்சை மரத்தை வெட்டலாகாது என்பது உலகுரை. அது குறித்தே, “எட்டி மரமானாலும் பச்சென்றிருக்கப்பகர்வார் காண்” என வுரைக்கின்றார். எட்டிமரம் காய்க்கினும் காயாதொழியினும் எவராலும் விரும்பப்படாது என அறிக. குணத்தினும் குற்றமே என்பால் மிக்கிருக்குமாதலால் “குற்றமெலாம் நாடாது” எனவும், குற்றம் மிகவுடையேன் என்பது தோன்ற “நஞ்சனையேன்” எனவும், என்பால் அன்பு கொள்க என்றற்கு “அமர்ந்து” எனவும் உரைக்கின்றார். அன்பு கொண்டவிடத்துக் குற்றம் காணப்படாதென்பது கொள்கை. “வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம், தீரக் காய்ந்துழி நல்லவும் தீயவாம், ஓரும் வையத் தியற்கை” எனத் திருத்தக்க தேவர் கூறுவர் (சீவக). அதனால் என்னை அமர்ந்து நோக்கி, “அஞ்சேல் நையேல் என்பாய்” என வேண்டுகின்றார். இறைவன்பால் சொல்வேறு செயல்வேறு படுவ தில்லாமையால் “என்பாய்” என உரைக்கின்றார்.
இதனால், குற்றமிகுதியால் நஞ்சனையேனாயினும், குற்றம் நாடாது அன்பு செய்து அருள வேண்டுமென இறைஞ்சியவாறு.
|