57
57. எல்லாம் அறியவல்லதும் எல்லாம் செய்யவல்லதும் இறைவன் திருவருள்; அதனைத் தவிர மக்கட்கு
உறுதி நல்குவது வேறியாதும் இல்லை. இதனை நன்கு எண்ணிய வள்ளற்பெருமான், திருவருட்பேறு இல்லையாயின்
ஒன்றும் செய்யலாகாது; அறிவும் செயலும் வாய்ந்துள்ள மக்களுயிர்க்கு ஒன்றும் செய்யலாகாமை எவ்வாறு
அமையும் என ஆராய்கின்றார். பேரருள் முதல்வனான இறைவனது சீர்களைக் கற்றிருத்தல் வேண்டும்.
கற்றவர் கழகத்தில் கலந்திருந்து கற்றறிவைத் தூய்மை செய்துகொள்ளல் வேண்டும். அங்ஙனம் பெற்ற
அறிவில் உள்ளதன் உண்மையுணரும் திறம் பெறலாம். இவையொன்றும் தம்பால் இல்லாமை காண்கின்றார்.
இயல்பாய் அமைந்த தமது உயிரறிவும் சிறுமையுடையதாதலை உணர்கின்றார். இவற்றை இப் பாட்டின்கண்
தொகுத்துரைக்கின்றார். அருள் புரியுமாறு சிவனை வேண்டுகின்றார்.
2024. கற்றறியேன் நின்னடிச்சீர் கற்றார் கழகத்தில்
உற்றறியேன் உண்மை உணர்ந்தறியேன் - சிற்றறிவேன்
வன்செய்வேல் நேர்விழியார் மையலினேன் மாதேவா
என்செய்வேன் நின்னருளின் றேல்.
உரை: மாதேவனே, கொலை செய்யும் வேல்போன்று விழியினையுடைய மகளிர் விளைவிக்கும் காம மயக்கத்தையுடைய யான், நின் நலன்களை யுணர்த்தும் நூல்களைக் கற்று அறிவன அறிந்திலேன்; நின்நலன்களை யுணர்த்தும் நூல்களைக் கற்று அறிவன அறிந்திலேன்; நின் திருவடிவைச் சிறப்பித்துரைக்கும் நூல்களைக் கற்ற சிவஞானிகள் கூட்டத்துட் சென்றறியேன்; கற்றலும் கேட்டலும் கொண்டு உண்மை யுணர்வு பெற்றேனுமில்லை; எனது இயற்கையறிவும் சிற்றறிவு; ஆதலால்; நின் திருவருள் இல்லையாயின் யான் என் செய்வேன். எ.று.
தேவர் என்று தொழப்படும் யாவருக்கும் பெரிய தேவனாதலின் “மாதேவன்” எனப் புகல்கின்றார். “யாதோர் தேவர் எனப்படுவார்க்கெலாம் மாதேவன்னலால் தேவர் மற்றறில்லையே” (திருக்குறுந். ஆதிபுராணக்) என்று நாவுக்கரசர் கூறுவது காண்க. வன் செய்- வன் செயலாகிய கொலைத் தொழில். செய் - முதனிலைத் தொழிற்பெயர். கண்டாரை மையலுறுவிக்கும் விழி குலமகளிர்க் கின்மையின், இங்கே 'விழியார்' என்றது பொருட்பெண்டிர் எனக் கொள்க. கற்றறிதல் முதலியன செய்யாமைக்குக் காரணம் வேல்விழியார் பாலுற்றமையல் என்றற்கு “மையலினேன்” எனக் குறிக்கின்றார். பல நூல்களைக் கற்பினும், அவற்றுள் அறியத் தகுவனவற்றை அறியாமை தீதென்பது புலப்பட, “கற்றறியேன்” என்று கூறுகின்றார். கற்றறிவு பெற்றவர் காம மயக்கிற் காளாகாது சிவனையடைவர் என்பாராய், ஞானசம்பந்தர் “கற்றறி வெய்திக் காமன் முன்னாகும் முகவெல்லாம், அற்றரனே நின் அடிச்சரண் என்னும் அடியோரக்குப் பற்றதுவாய பாசுபதன்” (சீர்காழி. புறவம்) என வுரைக்கின்றார். கற்றிலனாயினும் கற்றவர் சூழலையடைந்து கேட்பது நன்றாகும்; அதனையும் செய்யாமை தோன்ற, “கற்றவர் கழகத்தில் உற்றறியேன்” என்று கூறுகின்றார். இவ்வாற்றல் உண்மையுணரும் திறமும் இல்லேனாயினேன் என்பவர், “உண்மை யுணர்ந்தறியேன்” என்று இசைக்கின்றார். கற்றலும் கேட்டலும் இல்லார்க்கு உண்மை யுணர்வு எய்தாது என்பதை, “கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர்தங்களோடும் உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயனானேன்” (குறைந்த நேரிசை) என திருநாவுக்கரசர் தெரிவிக்கின்றார். இயற்கையறிவு சிறுமையுடைய தென்றற்குச் “சிற்றறிவேன்” என்று செப்புகின்றார். இவ்வாற்றால் நின் திருவருள் துணையின்றி யாதும் செய்ய வல்லேனல்லேன் எனத் தெளியக் கூறலுற்று, “நின் அருளின்றேல் என் செய்வேன்” என்று கூறுகின்றார்.
இதனால் திருவருளின் இன்றியமையாமை கூறியவாறு.
|