58
58. இறைவன் திருவருளை உயிர்க்குள்ள இயற்கையறிவால் பெற முடியாதுபோலும் என வள்ளலார்
கருதுகின்றார். உண்மை ஞானத்தால் உரவோராகிய பெருமக்கள் பெறலாவதென அறிந்து அதனை மிகவும்
விரும்புகின்றார்கள். அவரைப் பார்க்கிறபோது அத் திருவருளைப் பெற்றே தீர்தல் வேண்டுமென்ற
வேட்கை பெருகுகிறது. யாது செய்தால் திருவருள் கைகூடும் எனச் சிந்திக்கின்றார். வழியொன்றும்
புலனாகாமை காண்கின்றார். அத் திருவருளையுடைய சிவனையே கேட்க நினைக்கின்றார். கேட்டற்கு இன்றியமையாத
அன்பு தமது உள்ளத்தே இல்லையென்று கருதி அஞ்சுகின்றார். அதனை இப் பாட்டின்கண் தொகுத்துப்
பாடுகின்றார்.
2025. மெய்தான் உடையோர் விரும்புகின்ற நின்அருளென்
செய்தால் வருமோ தெரியேனே - பொய்தாவு
நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினைக்கேட்க
அஞ்சினேன் அன்பின்மை யால்.
உரை: அம்பலத்தில் ஆடும் கூத்தப்பெருமானே, மெய்யுணர்வுடைய பெருமக்கள் விரும்புகின்ற நின் திருவருள் எச்செயல் செய்தால் வரும் என்று அறிகிலேன், பொய் பரவிய நெஞ்சமுடையேனாதலால்; நின்னிடத்து எனக்கு அன்பு இல்லாமையால் நின்னைக் கேட்கவும் அஞ்சுகின்றேன். எ.று.
மன்று - அம்பலம். நிருத்தன் - கூத்தன். எல்லாம் அறியவும், எல்லாம் செய்யவும், சிவஞானவின்பங்களைப் பெறவும் துணையாவது திருவருளாதலால், அதனை மெய்யுணர்வால் அறிந்த பெருமக்கள் அதனையே விரும்புகின்றார்கள்; அதனால், “மெய்தான் உடையோர் விரும்புகின்ற நின்னருள” என வுரைக்கின்றார். காரைக்கால் அம்மையாரும், “அருளே உலகெல்லாம் ஆள்விப்ப தீசன், அருளே பிறப்பறுப்பதானால், அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும், எப்பொருளும் ஆவ தெனக்கு” (அற்பு. 9) என்று சிறப்பிப்பது காண்க. இத்தகைய நல்லருள் எனக்கு எய்தவேண்டுமாயின், யான் செய்யக்கடவது இன்னதென எனக்குத் தெரியவில்லை என்பாராய், “என்செய்தால் வருமோ தெரியேன்” என்று கூறுகின்றார். தெரியாமைக்குக் காரணம் என் நெஞ்சில் பொய்ம்மையே நிறைந்திருப்பது என்றற்கு “பொய்தாவும் நெஞ்சினேன்” என இயம்புகின்றார். தாவுதல் - தாவிப் பரவுதல்; நிறைதலுமாம்; கெடுதல் எனப் பொருள்கொண்டு, பொய்ம்மையாற் கேடுற்ற நெஞ்சுடையேன் எனினும் அமையும். அருட் செல்வமே யுடையஈசனாதலின், நின்னைக் கேட்பது நேரிதாயினும், அன்பின்மை நெஞ்சைத் தடுத்தமையின் கேட்டறிய அஞ்சினேன் என்பாராய், “நினைக்கேட்க அஞ்சினேன் அன்பின்மையால்” என ஏதுவுடன் எடுத்துரைக்கின்றார்.
இதனால், பொய் கெட்டு மெய்யுணர்வுற்றுத் திருவருட்பேறு எய்த வேண்டுமென்பது தெரிவித்தவாறு.
|