59

      59. தமது நினைவும் சொல்லும் செயலும் பொய்ம்மை கலந்திருப்பது கண்ட மாணிக்கவாசகர், தமது நெஞ்சு முதலியன பொய்யாயினும், இறைவனை நோக்கி “அழுதால் உன்னைப் பெறலாமே” என உரைப்பது வள்ளலார் நினைவில் எழுகிறது. அவரும்,. “மாதேவா ஓவா மருந்தே மாமணியே” என்று புலம்பலுற்றார். அதனிடையே இறைவன் அருள்வானென ஓர் எண்ணம் உண்டாகிறது. அதனை எப்பொழுது அருள்வான் என்பது தெரியாமையால் சித்தம் கலக்க மெய்துகிறது; அருட்பேறு எய்துதற்குமுன் செய்கைக்குரிய உடம்பு நில்லாது கெடுமாயின் என் செய்வது என்ற கவலை தோன்றுகிறது. அதனை இப் பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.

2026.

     மாதேவா ஓவா மருந்தேவா மாமணிஇப்
     போதேவா என்றே புலம்புற்றேன் - நீதாவா
     யானாலுன் சித்த மறியேன் உடம்பொழிந்து
     போனாலென் செய்வேன் புகல்.

உரை:

     மாதேவனே வருக; தன்மை நீங்காத மருந்து போல்பவனே வருக; பெரிய மாணிக்கமணி போன்றவனே இப்போதே வருக என்று சொல்லிப் புலம்புகின்றேன்; நீ வருந்தருளுதற்குத் தாழாயாயினும், நின் திருவுளப்பாங்கினை அறியேன்; எடுத்துள்ள இவ்வுடம்பு இறந்தொழிந்தால் யான் என்ன செய்வேன், நீயே சொல்லுக. எ.று.

     மருந்தெல்லாம் ஒருகாலத்தே நோய் தீர்க்கும் தன்மையிழந்து கெடுதல் உண்டு; சாவா மருந்தெனப்படும் தேவரமுது உண்டும் தேவர்கள் இறந்து போதலுண்டு; அத்தகைய குறைபாடில்லாத தென்றற்கு “ஓவா மருந்தே” என்று உரைக்கின்றார். “விண்ணோ ரமுதுண்டும் சாவ” என இளங்கோவடிகள் உரைப்பர். வேண்டினார்க் கருள்புரிவதில் சிவபெருமான் தாமதியான் என்பதை, மார்க்கண்டர், சண்டீசர் கண்ணப்பர் முதலாயினர் வரலாறுகள் காட்டலால், “நீ தாவாயானாலும்” என்று கூறுகின்றார். உம்மை; விகாரத்தால் தொக்கது. என்னளவில் உன் திருவுள்ளம் என்ன நினைக்கின்றதோ தெரியவில்லை என்பார், “சித்தம் அறியேன்” என்று இறைஞ்சுகின்றார். இப்போதே வருக என ஆத்திரப்படுதற்குக் காரணம், எனது உடம்பின் நிலையாமை என்பது விளங்க “உடம்பொழிந்து போனால் என்செய்வேன்?” என விளம்புகின்றார். உருவில்லாத உயிர்க்கு அறிதற்கும் செய்தற்குமென அகமும் புறமுமாகிய கருவி கரணங்களுடன் கூடியது இவ்வுருவுடைய வுடம்பு; இது முதுமையால் செயலொழியினும், நோயுற் றிறந்தொழியினும் அறிவன அறிந்து செய்வன செய்து நலம் பெறேன் என்பது புலப்பட. “என்செய்வேன்” என்றதோடமையாது, “புகல்” எனப் புகல்கின்றார்.

     இதனால், யாக்கை நிலையாமை கூறி விரைந்து அருள்புரிக என வேண்டிக் கொண்டவாறு.