60
60. செய்வினைப் பயன் செய்பவனையே சேர்வது முறையாதலால், பயனில்லனவே செய்து அவற்றிற்குரிய
குற்றமெல்லாம் என்னையடையப் பெற்றுள்ளேன். அவை நீங்கினாலன்றி யான் உய்திபெறும் தகுதி யுடையனாகேன்.
அவற்றிற்காக செய்யத்தக்கது தெரியாமல் வருந்துகின்றேன் என்கிறார் வள்ளற் பெருமான். அதனை
வாய்விட்டுரைத்து வருந்துபவர், “ஐயனே, முன்பு என்னைப் படைத்தருளியபோது அறிதற்கும் செய்தற்குமுரிய
கருவிகளைச் செவ்வையாக உதவியருளினாய், இப்போது அவை எனக்குத் துணை செய்யாமையால் உன்னிடமே
கொடுத்துவிடுகிறேன்; நீயே செய்வன செய்க; என்னிடம் என்செயல் என ஒன்றும் இல்லை” என உரைக்கின்றவர்,
இப்பாட்டின்கண் வைத்துப் பாடுகின்றார்.
2027. கொன்செய்தாற் கேற்றிடுமென் குற்றமெலாம் ஐயஎனை
என்செய்தால் தீர்ந்திடுமோ யானறியேன் - முன்செய்தோய்
நின்பால் எனைக்கொடுத்தேன் நீசெய்க அன்றிஇனி
என்பால் செயலொன் றிலை.
உரை: பயனில்லாதவற்றைச் செய்தவர்க்கெய்தும் குற்றமெல்லாம் எனக்கும் அமைதலால், ஐயனே, என்னை என்ன செய்தால் அக்குற்றமனைத்தும் நீங்குமோ அறியேன்; எனக்கு உடம்பளித்த அந்நாளில் யான் செயற்பாலன செய்தருளினாயாதலால், இப்போது என்னை நின்பாற் கொடுந்தொழித்தேன்; நீயே யாவும் செய்க; இனி என் செயலென என்னிடம் ஒன்றும் இல்லை. எ.று.
கொன்னைச் சொல், பயனின்மையைக் குறிப்பது. பயனிலமொழிதலே ஒருவனை மக்கட் பதடியாக்குமெனில் பயனில செய்பவனை அறிஞருலகு எவ்வகைக் குற்றமுடையனாக்கி இகழும் என்பது யாரும் சொல்ல வேண்டாவாதலின் வள்ளலாரும், “கொன் செய்தாற் கேற்றிடும் என் குற்றம் எலாம் எனை என் செய்தால் தீர்ந்திடுமோ” என்பவர், தமது அறிவுக்கு அது விளங்காமை புலப்பட, “யான் அறியேன்” என மொழிகின்றார். கேவலத்தில் உடம்பொடு கூடாது மலவிருளிற் கிடந்த ஆன்மாவுக்குக் கருவி கரணமொடு கூடிய உடம்பளித்து அவற்றை முறையே உயிர்ப்பொருட்டு அறிவன அறியவும் செய்வன செய்யவும் செய்வித்தமை நினைத்து, “முன்செய்தாய்” என்று இயம்புகின்றார். அவை என்வழி நில்லாது என்னைத் தம் வழியில் ஈர்த்துப் பிறவித் துன்பத்துக்கிரையாக்குதலால், இப்போது அவற்றினின்றும் என்னை மீட்டு உனக்கே யளிக்கின்றேன் என்பாராய், “நின்பால் எனைக் கொடுத்தேன்” என்றும், இனி அவற்றை நீ இயக்குக என வேண்டுவர், “நீ செய்க” என்றும், இனி, என் செயல் என்பதற்கு ஒன்றும் இல்லை என்றற்கு “இனி என்பாற் செயலொன்றிலை” என்றும் உரைக்கின்றார். சிவன்பால் தன்னைக் கொடுத்தல் சிவயோகம் என்றும், “என்பாற் செயல் ஒன்றிலை” என இருத்தல் சிவபோகம் என்றும், அறிவு நூல்கள் கூறுகின்றன. “தனக்கென ஓர் செயலற்றுத் தான் அதுவாய் நிற்கில், நாதனானவன் உடலுயிராய் உண்டுறங்கி நடந்து நானா போகங்களையும் தானாகச் செய்து, பேதமற நின்று இவனைத் தானாக்கி விடுவேன்” என்று உண்மை நெறி விளக்கத்தில் உமாபதி சிவனார் உரைப்பது காண்க.
இதனால், சிவயோக போகங்கள் கைவரும் திறம் கூறியவாறு.
|