61

      61. துன்பத்தால் உள்ளம் தளர்ந்து உலகுயிர்களை நோக்குகின்றார் வடலூர் வள்ளல். மக்களும் மாக்களும் பிறவுமாகிய உயிர்வகைகள் பலவும் இன்பமுடன் இருப்பதாகக் காண்கின்றார். எல்லாரும் இன்புற்றிருக்க யான் மாத்திரம் துன்பத்தில் துயர்வது ஏன் என்று எண்ணுகின்றார். இவ்வுயிர் வகை யாவும் இனி இறைவனுடைய திருவடி நீழலை எய்தி இன்புறுமென்று தெளிகின்றேன். இதற்கு ஏது இல்லாமல் இல்லை; மண்ணுலகில் உயிர்கட்குத் தீதென்பன யாவும் திரண்டு என் மனத்தின்கண் வந்து புகுந்துகொண்டு, என்னின் வேறாய எவ்வுயிரிடத்தும் தீதென்பது இல்லாதொழிந்து விட்டதே காரணம் எனத் துணிந்து இப்பாட்டிடைத் தொகுத்துப் பாடுகின்றார்.

2028.

     எண்ணிலெளி யேன்தவிர எல்லா உயிர்களுநின்
     தண்ணிலகுந் தாணீழல் சார்ந்திடுங்காண் - மண்ணில்வருந்
     தீங்கென்ற எல்லாமென் சிந்தையிசைந் துற்றனமற்
     றாங்கொன்றும் இல்லாமை யால்.

உரை:

     மண்ணுலகில் தீது எனப்படும் எல்லாவகைக் குற்றங்களும் என் சிந்தையிடமாகத் தம்மில் இசைந்து வந்து விட்டதோடு வெளியில் எங்கும் இல்லாமையால், எண்ணிப் பார்க்குமிடத்து எளியனாகிய யான் தவிர எல்லாவுயிர்களும் குளிர்ச்சி நிலவும் நின் திருவடி நீழலை வந்தடையும். எ.று.

     அவலக் கவலையாற் கையறவுபட்டு வருந்துவோர், தாம் ஒருவரே வருந்துவதாகவும் உலகில் ஏனையோர் அனைவரும் இனிதிருப்பதாகவும் எண்ணியும் சொல்லியும் ஏங்குவர். காதலன் பிரிவாற் கையறவு எய்தும் நங்கையொருத்தி உறக்கமின்மை கூறுவாள். இரவுப்போதுக் கிரங்கி, “மன்னுயிரெல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்ல தில்லை துணை” (குறள்) என்றும், “முனிவின்று நனந்தலை யுலகமும் துஞ்சும் ஓர்யான் மன்ற துஞ்சா தேனே” (குறுந். 6) என்றும் வருவன இதற்குச் சான்றாம். இவ்வாறே வடலூர் வள்ளற் பெருமான் உலகில் உயிர்கள் அனைத்தும் இறைவன் தாணிழல் பெற்று இன்புறும் தகுதி பெற்றுவிட்டாற் போலவும். தம்பால் தகுதிபெறாமைக் கேதுவாகும் தீமை முற்றும் சேர்ந்திருப்பதாகவும் எண்ணிக் கவல்கின்றார். ஏனை உயிர்கள் யாவும் தீது ஒன்றுமின்றித் தூயவாய்ச் சிவன் திருவடிப் பேற்றுக் குரியவாயின என்றற்கு “எல்லா வுயிர்களும் நின் தண்ணிலகும் தாணீழல் சார்ந்திடுங்காண்” என்றும், தமக்கு அப் பேற்றினை எய்தும் நற்பான்மை இல்லை என்றற்கு “எளியேன் தவிர” என்றும் இயம்புகின்றார். சிவப்பேற்றுக்குரிய தகுதியில்லையா தற்கு உலகிலுள்ள உயிர்கள் அனைத்தின்பாலும் உள்ள குற்றம் அனைத்தும் ஒருங்கு திரண்டு தமது சிந்தைக்கண் புகுந்து நிறைந்து விட்டமை காரணம் என்பாராய், “மண்ணில் வரும் தீங்கென்ற எல்லாம் என்சிந்தை இசைந்துற்றன” என்றும், ஏனை உயிர்களிடத்தே குற்றமொன்றும் இல்லாதொழிந்தது என்பது புலப்பட, “ஆங்கு ஒன்றும் இல்லாமையால்” என்றும் எடுத்துரைக்கின்றார். தன்னையும் ஏனை உயிர்களையும் ஒப்பவைத்து எண்ணுமாறு தோன்ற, “எண்ணில்” என்று கூறுகிறார். எண்ணில் எல்லாவுயிர்களும் என இயைத்து எண்ணுதற்கடங்காத எல்லாவுயிர்களும் என்றலும் ஒன்று. பிறவி வெம்மையால் வெதும்புவார்க்கு இறைவன் திருவடி நீழல் தண்ணியதாய் இன்பம் செய்யுமாறு விளங்க, “தண்ணிலகும் தாணீழல்” என வுரைக்கின்றார். மெய்கண்ட தேவர், “தண்ணிழலாம் பதி” (சிவ. ஞா. போக. 9) என்பது காண்க. மண்ணுலகு உடம்பொடுகூடிய உயிர்கட்கு வினைசெய் யிடமாதலின், “மண்ணில் வரும் தீங்கென்ற எல்லாம்” என்று கூறுகின்றார். உயிர்களை யடைதற் கமைந்த குற்றமனைத்துக்கும் தமது நெஞ்சம் இடமாயிற்றென்பர், “என் சிந்தையின் சந்துற்றன” என எடுத்தோதும் பக்கமும் நன்கு வலியுறுத்தற்கு “ஆங்கொன்றும் இல்லாமையால்” என ஏதுவுமாய்த் தருக்கமுறையில் இயைத்து உரைக்கின்றார். “ஆங்கொன்றும் இல்லாமையால்” என்ற ஏது “எல்லாவுயிர்களும் தாணீழல் சார்ந்திடுங்காண்” என்ற மேற்கோளையும், “தீங்கென்று எல்லாம் என் சிந்தை இசைந்துற்றன” என்ற பக்கப் பொருளையும் சாதித்து நிற்கின்றது. மேற்கோள் ஏது உதாரணம் எனவும், பக்க ஏது திட்டாந்தம் எனவும் கருதலளவைத் தருக்கமுறை காட்டப்படும்.

     இதனால், ஏனை உயிர்களை யுயர்த்தித் தன்னைத் தாழ்த்தித் திருவடிப் பேற்றுக்கு உரிமை பெற அருளுக எனக் குறிப்பாய் வேண்டியவாறு.