62
62. முன்னாளில் அயோத்தியில் இருந்து அரசு புரிந்த அரிச்சந்திரன் வரலாற்றை நினைக்கின்றார்
வடலூர் வள்ளல். பொய்யாமையாகிய நல்லறத்தைக் காத்தற் பொருட்டுத் தன் மனைவியையும்,
மகனையும் விற்று முடிவில் தன்னையும் ஒரு புலையனுக்கு விற்றான். அதனால் அவன் பெயர் மெய்ம்மைக்கு
எல்லையாக இன்றும் நின்று நிலவுகிறது. அஃது உண்மையாயின் மெய்ம்மைக்கு எல்லையாக அவனை
முன்னாளில் தோற்றுவித்த நீ, பொய்ம்மைக்குக் கீழ் எல்லையாக என்னை அந்நாள் பிறப்பித்திருக்கலாமே;
அவ்வாறு செய்யாமை ஏனோ என்று சிவபிரானை வினவும் பொருளில் இப்பாட்டைப் பாடியருளுகின்றார்.
2029. தாரம்விற்றுஞ் சேய்விற்றுந் தன்னைவிற்றும் பொய்யாத
வாரம்வைத்தான் முன்னிங்கோர் மன்னனென்பர் - நாரம்வைத்த
வேணிப் பிரானதுதான் மெய்யாமேல் அன்றெனைநீ
ஏணில் பிறப்பித்த தில்.
உரை: முன்னாளில் இம்மண்ணுலகில் அரிச்சந்திரன் என்ற மன்னன் தன் மனைவியை விற்றும்., தன்னையே விற்றும் பொய்யாமையாகிய அறத்தின்கண் அன்பு வைத்துயர்ந்தான் என்று புராணிகர் சொல்லுகின்றார்கள்; கங்கையைத் தரித்த சடையையுடைய பெருமானே, அது மெய்யாயின், அந்நாளில் பொய்ம்மைக்கு எல்லையாக என்னைப் பிறப்பியாமை செய்தது என்னை, கூறுக. எ.று.
தாரம் - மனைவி, சேய் - மகன். மனைவி மக்களை ஒரு வேதியற்கு விற்ற அம் மன்னன் தன்னை ஒரு புலையற்கு விற்றான் மெய்ம்மையை விடலாகாதென்ற வன்மைமிகுதி நிறுவுதற்கு. பொய்யாத வாரம் - பொய்யாமையாகிய வாரம் என்க. பொச்சாவாக் கருவி என்றற்குப் (குறள்) பொச்சாவாமையாகிய கருவியெனச் சேனாவரையர் பொருள் கூறுவது காண்க. வாரம் - அன்போடு செய்யப்படும் அறத்தின் மேற்று; ஆகு பெயர் . அந்நாளில் அரிச்சந்திரனை மெய்ம்மைக்கு வலிய வேலியாகப் பிறப்பித்தது போல, என்னைப் பொய்ம்மைக்கு வலிய வேலியாகப் பிறப்பித்தல் வேண்டும். அதனைச் செய்யாமையால், அவ் வரலாற்றில் ஐயம் உறுகின்றேன் என்பது புலப்பட “மெய்யா மேல் அன்று பிறப்பித்ததில் என்னை?” எனக் கேட்கின்றார். ஏண் - வலிய வேலி.
இதனால், மெய்ம்மைக்கு அரிச்சந்திரன் போலப் பொய்ம்மைக்கு யான் உளன் என்று தம்மை இகழ்ந்தவாறு.
|