63
63. யானையுண்ட விளங்கனி
போல என்றொரு சொல்வழக்கு இலக்கியங்களிற் காணப்படுவதுண்டு. யானையுண்ட விளாம்பழம் மறுபடியும்
அதன் மலத்தோடு வெளிப்படும்; அக்காலை அதனை உடைத்து நோக்கினால் அதனுள் ஒன்றும் இராது; ஓடு
மாத்திரம் அப்படியே காட்சி தரும் என்று பண்டையோர் கூறி வந்தனர். பிற்காலத்தில் உண்மை
காண வேண்டி அதுபற்றி யாராய்ந்தவர்கள் “யானைத்தீ” என்றொரு நோயுண்டு; அதனாற் பற்றப்பட்ட
விளாம்பழம் உள்ளீடின்றி ஓடு மாத்திரம் மூடியிருக்கும் என உரைப்பாராயினர். இவ்வகையால் உள்ளீடில்லாத
உரை வேழமுண்ட விளாம்பழம் போல்வதென வழங்கி வருகிறது. “வெஞ்சின வேழமுண்ட விளங்கனி” (சீவக.
1122) என்றற்கு நச்சினார்க்கினியர் “தேரை போயிற் றென்றாற் போல்வதொரு நோய்” (சீவக.
1024) என்று விளக்கம் கூறுகின்றார். இதனைக் கருத்திற் கொண்ட வடலூர் அடிகள், புறத்தே பழுத்த
பழம்போலத் தோன்றி உள்ளீடு ஒன்றுமில்லாத வேழமுண்ட விளாம்பழம் போல அடியேன், சிவனுக்கு அன்புடைய
அடியார்போலக் காட்சி தருகின்றேனாயினும், “என் உள்ளத்தில் நின்பால் அன்பில்லை யென்பது,
சிவனே,. நினக்கு நன்கு தெரியும்; பிறர் என்னைக் கண்டு சிவனடியார் என்னும்போது இவ்வெண்ணத்தால்
அஞ்சுகின்றேன்” என்று இப் பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்.
2030. உள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின்
வெள்ளென்ற வன்மை விளங்காதோ - நள்ளொன்ற
அச்சங்கொண் டேனைநினக் கன்பனென்பர் வேழத்தின்
எச்சங்கண் டாற்போல வே.
உரை: வேழமுண்ட விளங்கனியைக் கண்டு விளங்கனி என்று கொண்டாற் போல உள்ளத்தின் நடுவே அச்சங்கொண்டுள்ள என்னைக் கண்டோர் நினக்கு அன்பன் என்று சொல்லுகின்றார்கள்; நின் திருவடிக்கு மனம் கலந்து அன்பு செய்தறியேனாகவும், என்னுள்ளத்தின் வெள்ளிடையான அன்பின்மை பிறர்க்கு விளங்கப் புலப்படாதோ, எ.று.
யானைத்தீ என்ற நோய்பற்றியவழி விளங்கனி உள்ளுறை யொன்று மின்றி வெறிதே கனி வடிவில் தோன்றும்; இவ்வுண்மையறிதற்கு முன்பெல்லாம், யானையுண்ட விளங்கனி என்பதற்கு யானையுண்டு கழித்த விளங்கனி உள்ளுறை செரிப்புண்டு வெறிதே ஓடு மூடியிருக்குமென்று கருதினர். வேழமுண்ட விளங்கனி யென்பதை “வேழத்தின் எச்சம்” எனவும், உள்ளொன்றுமின்றிக் கனியுருவு குன்றாது தோன்றுவதைக் “கண்டாற் போல“ எனவும் கூறுகின்றார். சிவனடிக்கு அன்பின்றி அச்சம் நிறைந்த மனமுடைய என் தோற்றத்தைக் கண்டு பலரும் “அச்சம் கொண்டேனை நினக்கு அன்பன் என்பர்” என உரைக்கின்றார். நள் - நடு; இங்கே அது நடுவாய உள்ளத்தை குறிக்கின்றது. என் மனத்தின் கண் இல்லாத அன்பு உள்ளதாகப் பலரும் கூறுகிறார்கள் என்று புலப்படுத்தற்கே, “உள்ளொன்ற நின்னடிக்கு அன்புற்றறியேன்” என்று வெளிப்பட மொழிந்து, என்னுள்ளம் அன்பின்றி வெள்ளென அன்மைத் தன்மை கொண்டிருப்பது புறத்தே பிறர் அறிய விளங்காது போலும் என்றற்கு, “வெள்ளென்ற அண்மை விளங்காதோ” என விளம்புகின்றார். வேழமுண்ட விளங்கனியைக் கண்டவர் அதனைக் கனியெனக் கொள்வதுபோல் என்னைக் கண்டவர் என்னைச் சிவனடிக் கன்பனெனச் செப்புகின்றார்கள்; உள்ளத்திற்கும் அன்பின்மை புறத்தே அவர்கட்குத் தோன்றாதவாறு என்னே?
இதனால், அன்பர் என்பார் மேல் அறியாமை யேற்றாது அன்பின்மை புறத்தே விளங்கித் தோன்றாமை காட்டியவாறு.
|