64

      64. பகற்கூத்தாடுவோர் என்றோர் இனத்தார் சில ஆண்டுகள்வரை நம் நாட்டில் இருந்தனர்; இப்போது அவர்கள் அத் தொழிலைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்களைப் பகல் வேடத்தார் என்பதும் வழக்கம். எவ்வெவ் வேடத்தைக் கொண்டாலும் அவ்வேடம் உண்மை யுருவாகக் காட்சி தந்து காண்பவர் மனத்தை மருட்டிவிடும். சிவனடியார் போலத் தாம் தோன்றுவது வள்ளலார்க்குப் பகல்வேடம் போன்று மனத்தை அலைக்கின்றது. அதனால், சிவனை நினைந்து அடியேனைப் பார்ப்பவர் மருண்டு என்னை நினக்குப் பத்தரென உரைக்கின்றார்கள். உண்மை தெரிதலால், என் செயற்கும் பகல் வேடம் பூண்டார்க்கும் வேறுபாடு காணப்படவில்லை. இதற்கு என் செய்வேன் என வருந்தி இப் பாட்டைப் பாடுகின்றார்.

2031.

     நீத்தாடுஞ் செஞ்சடையாய் நீள்வேடங் கட்டிவஞ்சக்
     கூத்தாடு கின்றேனைக் கொண்டுசிலர் - கூத்தாநின்
     பத்தனென்பர் என்னோ பகல்வேடத் தார்க்குமிங்கு
     வித்தமிலா நாயேற்கும் வேறு.

உரை:

     கங்கையாறு துளும்பும் சிவந்த சடையுடைய பெருமானே, நின் அடியார் வேடம்பூண்டு போலிக்கூத்தாடும் என்னைக் கொண்டு, கூத்தப்பிரானே நின் பத்தருள் ஒருவன் என்று பலரும் கூறுகிறார்கள். பகல் வேடம் பூண்டு நடிக்கும் கூத்தார்க்கும் ஞானமில்லா நாயேனுக்கும் வேற்றுமை என்னோ? எ.று.

     நீத்தம் - நீர்; கங்கையாறு; இது நீத்தென ஈறு குறைந்து நின்றது. ஆடும்போதும் சிறு துளியும் வீழாதவாறு தாங்குதலின், சிவன் சடையை “நீத்தாடும் செஞ்சடையாய்” எனச் சிறப்பிக்கின்றார். செயற்கைக்கோலம் என்பது தோன்ற “வேடம் கட்டி” எனவும், காண்பார் கண்ணும் மனமும் உண்மையென மருளுதலின், “வஞ்சக் கூத்தாடுகின்றேன்” எனவும் உரைக்கின்றார். வேடமும், அதற்கேற்ற சொல்லும் செயலும் உடையராவது பிறர்க்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறதென்பார், “கொண்டுசிலர் கூத்தாநின் பத்தர் என்பர்” என்று கூறுகிறார். பகல் வேடம் பூண்டு ஆடுவார்க்கு வேடம் எனப் புறத்தார் அறியாவாறு நடிப்பது வித்தகமாகும். அவ் வித்தகம் தானும் அடியேனுக்கு இல்லை யென்றற்கு “வித்தமிலா நாயேன்” என வுரைக்கின்றார். வித்தகம், வித்தம் என வந்தது. வித்தகம் - அறிவு.      இதனால், அடியார் வேடம் பூண்டமை கொண்டு என்னைப் பலர் நின்பத்தர் என்பது பொருந்தாதென்றவாறு.