65

      65. சிவன்பால் மெய்யன்புடையார் பலர் பல பாட்டுக்காளால் பாடி மகிழ்கின்றார்கள். பல பாட்டுக்களைப் பன்னாளும் பாடியவண்ணமிருப்பதால் அவற்றை இறைவன் வரவேற்று மகிழ்கின்றானென வள்ளலார் கருதுகின்றார். அதே நிலையில் தாமும் பாட முடியுமாயினும் தம்முடைய சொற்கள் சிவனுக்கு ஏற்குமோ என்று ஐயுறுகின்றார். ஏனெனில், மெய்யன்புடையார் பாட்டில் மெய்ம்மை நின்று ஒளிசெய்யும், யான் பொய்யனாதலால் என் பொய் அப்பெருமானிடம் மேவாது என நினைக்கின்றார். பொய்யனென்பது ஒருபால் இருக்க, இறைவன் திருவருளை நாளும் வேண்டுவது மெய்யன்றோ என்ற எண்ணம் தோன்றி ஊக்குகிறது. அஃது இப்பாட்டில் இடம்பெறுகிறது.

2032.

     அன்புடையார் இன்சொல் அமுதேறு நின்செவிக்கே
     இன்புடையாய் என்பொய்யும் ஏற்குங்கொல் - துன்புடையேன்
     பொய்யுடையேன் ஆயினுநின் பொன்னருளை வேண்டுமொரு
     மெய்யுடையேன் என்கோ விரைந்து.

உரை:

     இன்பமேயுடைய பெருமானே, அன்புடைய ஞானசம்பந்தர் முதலியோர் சொல்லும் இனிய அமுது போன்ற சொற்களையேற்று இன்புறும் நின் செவிகள் என் பொய்ம்மொழிகளை விரைந்து ஏற்குமோ? துன்பமுறும் யான் பொய்யே யுடையனாயினும் நினது பொன்போன்ற திருவருளை வேண்டுவதாகிய ஒரு மெய்ம்மொழியுடையேன் என்று சொல்லுகிறேன். எ.று

     வரம்பில் இன்பமுடையனாதலால் சிவபெருமானை “இன்புடையாய்” என்று சிறப்பிக்கின்றார். ஞானசம்பந்தர் முதலிய மூவரும் மாணிக்கவாசகரும், காரைக்காலம்மையார் முதல் தாயுமானவர் ஈறாக வந்த அன்பர் பலரும் அடங்க “அன்புடையார்” எனத் தொகுத்துக் கூறுகின்றார். அவர்கள் உரைத்த ஒவ்வொரு சொல்லும் இனிய அமுதுபோல் இன்பம் தருவது என்றற்கு “இன்சொல் அமுது” என்றும், அச்சொல் சென்று பொருந்தும் நின் செவிக்கு என் பொய் நிறைந்த மொழி சென்று பொருந்தாதே என்பாராய், “அமுது தேறும் நின் செவிக்கு என் பொய்யும் ஏற்கும் கொல்“ என்றும் உரைக்கின்றார். செவிக்கென்ற விடத்துக் குகரத்தைச் சாரியை யாக்கி “நின் செவிகள் என்பொய்யும் விரைந்து ஏற்குங்கொல்” என இயைப்பினும் அமையும். பொய் நிறைந்த மொழி 'பொய் யெனப் படுகிறது. துன்புடையேனாதலால் பொய்யே கூறுகின்றேனென்றற்குத் “துன்புடையேன் பொய்யுடையேன்” என்று சொல்லி, இவற்றிடையே நின் திருவருளை வேண்டுவதாகிய மெய்யுரையுடையேன் என்பது தோன்றப் “பொன்னருளே வேண்டுமொரு மெய்யுடையேன்” என்று கூறுகின்றார். எனகு; செய்கென்னும் வாய்பாட்டு வினைமுற்று. ஓகாரம் அசைநிலை.

     இதனால், துன்பமிகுதியால் பொய்யுரைக்கின்றே னாயினும், நின் திருவருளை வேண்டுவதாகிய மெய்யுடையேனாதலின், என் வேண்டுகோளை ஏற்றருள்க எனப் பரவியவாறு.