66
66. சிவனுடைய பரமாம் தன்மையையும்
மக்களினத்தையும் பார்க்கின்ற வள்ளற்பெருமான், மக்களிடத்தில் சிவநினைவு இல்லாமையை யுணர்கின்றார்.
அதனால் வரக்கடவ குற்றத்தையும் எண்ணுகின்றார். சிவனை மனத்தால் நோக்கி, “பெருமானே, திருமால்
பிரமன் முதலிய தேவர்க்கும் பிறர்க்கும் நீயே புகலாகின்றாய்; அங்ஙனமிருக்க இம்மக்கள் நின்னை
நினையாதிருகின்றார்களே; இவர்கட்கு உய்தி யாது?” என எண்ணி, இப் பாட்டின் கண் அக் கருத்தை
அகப்படுத்திப் பாடுகின்றார்.
2033. என்னா ருயிர்க்குயிராம் எம்பெருமான் நின்பதத்தை
உன்னார் உயிரக்குறுதி உண்டோதான் - பொன்னாகத்
தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்த வர்க்குமற்றை
யார்க்கும் புகலுன் அருள்.
உரை: எனது அருமையான உயிர்க்கு உயிராக விளங்கும் எம்பெருமானே, நின் திருவடியை நினையாதவர்க்கு உறுதியாவது வேறு யாதுளது? திருமகளை மார்பிலே கொண்ட திருமாலுக்கும் நான்முகனுக்கும் இந்திரன் முதலியோர் பதங்களிலுள்ளவர்களுக்கும் மற்றும் யாவர்க்கும் திருவருளே புகலிடமாகாலான். எ.று.
திருவருளே யாவர்க்கும் புகலாயிருக்க, அருளாய அத்திருவடியல்லது உறுதிப்பொருள் வேறு யாவதும் என்பதாம். பெறற்கருமை பற்றி உயிரை “ஆருயிர்” என்றும், உயிரறிவின்கண் அருளால் மன்னி அறிவன அறிவிக்கும் சிறப்புப் பற்றி, “உயிர்க்குயிராம் எம்பெருமான்” என்றும் எடுத்துரைக்கின்றார். பாதம், பதம் என வந்தது. இறைவன் திருவடியைத் திருவருள் என்றலுண்மையின், பதமே உறுதியெனவும், புகல் எனவும் கூறுகிறார். அகள நிலையில் அருளும், சகளத்தில் திருவடியும் புகலிடமென அறிக. உன்னார் - எண்ணாதிகழ்பவர். பொன் - திருமகள். தானம் - இடம்; இது பதம் என்றும் வழங்கும். இந்திரன் முதலிய தேவர் தானத்திலுள்ளாரைப் பொதுவாகத் “தானத்தார்” என உரைக்கின்றார். மற்றையார் மண்ணில் வாழ்பவர்.
இதனால், சிவபெருமான் திருவருளே அனைவர்க்கும் புகலிடமாதலால் யாவர்க்கும் புகலிடமாவது அப் பெருமானது திருவடி; அதனை நினையார்க்கு உறுதி வேறில்லை என வற்புறுத்தியவாறு.
|