67
67. இளம்பருவத்தில்
பிள்ளைகள் தாம் வேண்டுவன நல்காவிடின் பெற்றோரை வெறுத்தும் இகழ்ந்தும் பேசுவதுண்டு. பேசினும்
பெற்றதாய் அவர்பால் சினம் கொள்ளாமல் பொறுப்பதே செய்வள். சிவபெருமான் தாயினும் சாலப்பரிவுடையன்
என்று சான்றோர் உரைப்பதறிந்தமையின் சிவனை நோக்கி, நீ வெறுத்தால் யான் யாது செய்வேன்?
என்று முறையிடுகின்றார்.
2034. வெள்ளைப் பிறைஅணிந்த வேணிப் பிரானேநான்
பிள்ளைப் பிராயத்தில் பெற்றாளை - எள்ளப்
பொறுத்தாள் அத் தாயில் பொறுப்புடையோய் நீதான்
வெறுத்தால் இனிஎன்செய் வேன்.
உரை: வெண்மையான பிறைச்சந்திரனைச் சூடிய சடையையுடைய பெருமானே, நான் பிள்ளைப்பருவத்தில் என்னைப் பெற்ற தாயை இகழ்துரைக்க அவள் பொறுத்து அன்பு செய்தாள்; அத்தாயினும் மிக்க பொறுப்புடைய நீ என்னை வெறுத்து ஒதுக்குவையாயின் நான் இனி என் செய்வேன்? எ.று.
உள்ள களங்கம் சிறிதும் வெளியே தெரியாத நிலையிலுள்ள இளம் பிறை என்றற்கு “வெள்ளைப்பிறை” எனக் கூறுகின்றார். இப்பிறையைச் சடைமுடிக்கு அணியாக கொண்டிருப்பது தோன்றப் “பிறையணிந்த வேணிப்பிரான்” என வியம்புகின்றார். வேணி - சடை . பிரான் - தலைவன். பிராயம் - பருவம். எள்ளல்-இளமையால், பெற்ற தாயின் பெருமை யறியாது இகழ்வது. “தாயிற்சிறந்த தயாவுடையன்” என்று சான்றோர் பரவுதல் கொண்டு, “அத் தாயிற் பொறுப்புடையாய்” என்றும், தாய் கைவிட்டவழிப் பிள்ளை செயலற்று வருந்துவது போல யானும் கெடுவேன் என்பாராய், “நீதான் வெறுத்தால் இனி என்செய்வேன்” என்றும் இயம்புகின்றார்.
இதனால், அருள் பெறாவிடத்துப் பெற்ற தாயாற் கைவிடப்பட்ட இளம்பருவத்துச் சிறுபிள்ளை போன்று கெடுவேன் என்று முறையிட்டவாறு.
|