68
68. வள்ளற்பெருமான் மனத்தின் கொடுமையை எண்ணுகின்றார். சிவபிரான் பேராயிரமுடையவன்; எனினும்
அவனைச் சிறப்பாக நினைந்து வழிபடுதற்கு ஐந்தே எழுத்துக்கள் உள்ளதை நினைவு கொள்கின்றார்.
அவ்வொழுக்கத்தையும் ஓதுவதின்றி மனம் கண்டவாறு ஓடுவது குறித்து இப்பாட்டின் வாயிலாக முறையிடுகின்றார்.
2035. ஆயிரமன் றேநூறும் அன்றேஈ ரைந்தன்றே
ஆயிரம்பேர் எந்தைஎழுத் தைந்தேகாண் - நீஇரவும்
எல்லு நினைத்தியென ஏத்துகினும் எந்தாய்வீண்
செல்லுமனம் என்செய்கேன் செப்பு.
உரை: ஆயிரம் பேர்களையுடைய எந்தையாகிய சிவனை நினைப்பிக்கும் எழுத்து ஆயிரமன்று; நூறன்று; பத்துமன்று; ஐந்தேயாகும்; அதனை நீ இரவும் பகலும் நினைந்து ஓதுக என்று வேண்டியவிடத்தும் என் மனம் வீணிற் சென்று அலைகிறது; பெருமானே, இதற்கு யான் என் செய்வேன்; சொல்லியருள்க. எ.று.
சிவனுக்குப் பெயர் ஆயிரம் கூறுபவாதலால், “ஆயிரம்பேர் எந்தை” என உரைக்கின்றார். “ஞானப் பேராயிரம் பேரினான்“ என்றும், “பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மான்” என்றும் ஞானசம்பந்தர் முதலியோர் கூறுவர். பெயர் ஆயிரம் கொண்டது போல ஓதி வழிபடும் எழுத்துக்கள் பல அல்ல ஐந்தே என்று வற்புறுத்தற்கு “ஆயிரமன்று, நூறுமன்று, பத்துமன்று, எழுத்து ஐந்தே காண்” என அறிவிக்கின்றார். “ஆயிரம் பேர் எந்தை எழுத்து ஐந்தே காண்” என்றது, திருவைந்தெழுத்தின் எளிவந்த தன்மையை எடுத்துரைத்தற்கென அறிக. இரவும் பகலும் எப்போதும் எண்ணி ஏத்துதற்குரியனவாதலால், மனத்தை நோக்கி, மனமே நீ இரவும் பகலும் ஓதுக என்று வேண்டியும், ஓதாமல் புறத்தே செல்வது பற்றி, “இரவும் எல்லும் நினைத்தி என ஏத்துகினும் ஏத்தாமல் வீண் செல்லும்” என வருந்துகின்றார். மனத்தின் கொடுமைக்கு அஞ்சி “எந்தாய்” என்று சிவன்பால் முறையிடுகின்றார். மனமென்ற அகக்கருவி இறைவன்தர வந்ததாதலால் “என்செய்கேன் செப்பு” என வேண்டுகின்றார். இறைவன் தந்ததாயினும் உயிராகிய ஆன்மா அடக்க அடங்கி அது காட்டும் அறிவு வழிச் செல்லும் அமைவுடையது; அதனால், மனம் அடங்காமைக் கேது, அடக்கும் திறமும் வன்மையும் ஆன்மவறிவு; செலுத்தாமையாம்; ஆகவே குற்றம் ஆன்மாவுக்கேயன்றி இறைவற்கன்று என்பது தெளிவு உணரற்பாற்றாம்.
இதனால், திருவைந்தெழுத்தை எண்ணி வழிப்படாக் குறையை எடுத்துரைத்து வருந்தியவாறாம்.
|