69
69. மனத்தின் கொடுமையே பின்னும் காட்சி தருகிறது. அதனைத் திருத்திச் செந்நெறியில் நிறுத்த
வள்ளலார் மிகவும் விழைகின்றார். அருவாய் நுண்ணிதாய்க் கட்புலனாகமல் இருத்தலின், அதனைப்
படைத்தளித்த சிவனால் திருத்திக்கொள்ள நினைந்து, ஆசைச் சூழலாகிய உலகியல் வாழ்விற்
சிக்கி நெஞ்சம் உய்திறனின்றி உழல்கின்றது. திருத்தியருள்க என இவ்வெண்பாவால் இறைவனை வேண்டுகின்றார்.
2036. வஞ்சந் தருங்காம வாழ்க்கையிடைச் சிக்கியஎன்
நெஞ்சந் திருத்தி நிலைத்திலையே - எஞ்சங்
கரனே மழுக்கொள் கரனே அரனே
வரனே சிதம்பரனே வந்து.
உரை: வஞ்சம் விளைவிக்கின்ற ஆசையுருவாய் வாழ்விற் சிக்கிய என் நெஞ்சினைச் சீர்செய்து, எம் சங்கரனே, மழுவேந்தும் கையனே, அரனே, மேலாயவனே, சிதம்பரத்தில் உள்ளவனே, அன்புடன் வந்து நன்னெறியில் நிலைத்திருக்கச் செய்திருக்கின்றாயில்லையே, யான் என் செய்வேன்? எ.று
பொன்னாசை, பொருளாசை, பெண்ணாசை,. மண்ணாசை முதலிய ஆசைகளே நிரம்பிய வாழ்வு காம வாழ்க்கை எனப்படும். பயன்மேல் ஆசைவைத்துச் செய்யப்படும் செயல்கள் காமகன்மம் எனப்படுவதும் அறிக. ஆசையலைத்தலால் விரும்பிய பொருளைப் பெறற்கு வஞ்சனைகள் செயலிடைப் புகுதல் இயல்பாதலின், “வஞ்சம் தரும் காம வாழ்க்கை” என்றும், இரவு பகல் எப்போதும் ஆசை பெருகி வலைவீசிப் பிணித்தலால், வாழ்க்கையிடைச் சிக்கிய என் நெஞ்சம்” என்றும் கூறுகின்றார். சிக்கலினின்றும் நீக்கி நேரிய நெறியிற் செலுத்த வேண்டும்; அதற்கு நின் திருவருள் துணைபுரிய வேண்டும்; அதற்கு நின் திருவருள் துணைபுரிய வேண்டும் என்பாராய், “நெஞ்சம் திருத்தி நிலைத்திலையே” என இறைஞ்சுகின்றார். சங்கரன் - சுகத்தைச் செய்பவன். அரன் - வினைத்தொடர்பை அரிபவன். எல்லாத் தேவர்கட்கும் மேலாயவன் என்பதுபற்றி “வரன்” எனவும், சிதம்பரத்தையுடையவன் என்றற்குச் “சிதம்பரன்” எனவும் இசைக்கின்றார்.
இதனால், காமவாழ்க்கையிற் சிக்கிய நெஞ்சைத் திருத்தி நன்னெறிக்கண் நிற்கச் செய்தலை வேண்டியவாறு.
|