70
70. உலகியல் வாழ்வுதரும் மாயா மயக்கம் மனத்தை மருட்டித் துன்பம் செய்விக்கின்றது. நோய்போற்
கிடந்து இரவும் பகலும் வருத்துவதே அதன் செயலாதலைக் கண்டு, இதற்கு மாற்று மருந்து யாது என எண்ணியபோது
இறைவன் திருவடி மருந்தாம் எனத் தெளிகின்றார். இதனை இப் பாட்டிடை வைத்து உரைக்கின்றார்.
2037. தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்தென்னை
வாழ்விக்கும் நல்ல மருந்தென்கோ - வீழ்விக்கும்
ஈங்கான மாயை இகந்தோர்க் கருள்வோய்நின்
பாங்கான செம்பொற் பதம்.
உரை: பிறவிக் கடலில் வீழ்த்தும் இவ்வுலகிடத்ததான மாயையைக் கடந்தோர்க்கு அருள் புரிபவனே. நின் பாலதான செம்பொன் போன்ற பதம் வஞ்சப்படுத்திக் கீழ்மை எய்துவிக்கும் உலகியல் மயக்கத்தை யொழித்து, திருவருளொளியில் உயர்வாழ்வு பெறச்செய்யும் நன் மருந்து என்பேன். எ.று.
வாழும் உலகமும், உயிர் வாழ்வதற்கு உதவும் உடல் கருவி கரணங்களும மாயையினின்று படைக்கப்ட்டனவாதலால் இவ்வாழ்வை மாயை என்பதும், அதன் போக்கில் செல்லும் உயிர்களை மாய வாழ்விலேயே வீழ்விக்குமென்றும், அறிவு நூலோர் கூறுவர். தனது மாய வாழ்விலே வீழ்த்துவது பற்றி, “வீழ்விக்கும் ஈங்கான மாயை” என உரைக்கின்றார். “ஈங்கு” என்றது இவ்வுலகத்தை. மாயாகாரியான இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தாலன்றி உயிர்கள் பிறவியறுத்து வீடுபெறல் இயலாது; மேலும் வாழப்பிறந்த உயிர்கள் வாழ்க்கையிற் பெறாலாகும் சுகதுக்கங்களை நுகர்ந்து கழிப்பது உய்யும் நெறியாகும்; சுகத்தை நுகருமிடத்து இன்பமுறும் உயிர் அதன்பால் விருப்பும், துக்கத்தை நுகருமிடத்து வெறுப்பும் எய்துமாயினும், பின்னதை மறந்து முன்னதன் இன்பத்தாய் அறிவு மயங்கி அதனையே பெருக்கி நெடிது நுகர முயல்கிறது. உலகியலும் அம் மயக்கத்துக்குத் துணை புரிகிறது. அதனால் அதனைச் “சகமாயை” என்று கூறுகின்றார். சுகதுக்கங்களை ஒப்ப நோக்கி உய்திபெற வேண்டிய உயிரறிவு, சகமாயையால் ஒருபக்கம் சாய்ந்து தாழ்வுபடுகிறது; ஒரு பக்கத்தை மறைத்து ஒரு பக்கத்தில் ஈர்ப்பதால் உயிரறிவு சகமாயையால் வஞ்சிக்கப்படுகிறது. உயிர் தானும் உலகியற் பொருளை ஒன்றொன்றாய்ப் பார்த்துணரும் சிற்றறிவுடையதே யன்றிக் காணப்பட்டதை முற்றவுணர்ந்து கொள்ளும் முற்றறிவுடையதன்று; அதனால் சகமாயையால் அது வஞ்சிக்கப்படுகிறது. இதனைக் காட்டுதற்கே “தாழ்விக்கும் வஞ்சச் சகமால்” என்று வள்ளற்பெருமான் உரைக்கின்றார். உயிரறிவை வஞ்சித்து மறைக்கும் உலகியல் மயக்கம் இறைவன் திருவருள் ஞானம் என்றும், திருவடி ஞானமென்றும் வழங்கும் செம்பொருளால் நீங்குமெனவும், நீங்கினார்க்குச் சிவபோகப் பெருவாழ்வு இனிது எய்தும் என்றும் நூலோர் உரைப்பர். அதுபற்றியே, “நின் செம்பொற்பதம் என்னை வாழ்விக்கும் மருந்து என்கு” எனக் கூறுகின்றார். வினைப்பயன்களை ஒப்ப மதித்து நுகரும் இருவினை யொப்புணர்வால் மயக்கம் நீங்கும் எனவும் திருவருள் ஒளி தோன்றிச் சிவஞானம் பெறுவிக்கும் எனவும் இசைத்தலால், “மாயை இகந்தோரக்கு அருள்வோய்” என மொழிகின்றார். செம்பொற்பதம், திருவடி ஞானம், பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்குவதால். சிவன் பாங்கான செம்பொற்பதம் என்று தெரிவிக்கின்றார்.
இதனால், சகமால் ஒழித்து சிவனது திருவருள் வாழ்வு எய்தும் திறம் உரைத்தவாறு.
|