71

      71. பிறர்பால் குறைகண்டு ஏசும் குணமும் செயலும் மக்களிடம் உள்ளன; அஃது அவ்வினத்துக்கே தாழ்வு பயப்பதை வள்ளற் பெருமான் அறிகின்றார். மக்களாய்ப் பிறப்பதினும் சிவத்தொண்டர்களின் உடையை வெளுத்தற்குத் துவைக்கும் கல்லாகத் தோன்றுவது நன்று. தொண்டர்க்குத் தொண்டு செய்த நலம் எல்லாம் அக்கல்லுக்கு எய்துகிறது எனக் காரணம் கண்டு அதனை இப் பாட்டிற்றொடுத்துப் பாடுகின்றார். 

2038.

     ஏசொலிக்கு மானிடனாய் ஏன்பிறந்தேன் தொண்டர்கடந்
     தூசொலிப்பான் கல்லாகத் தோன்றிலனே - தூசொலிப்பான்
     கல்லாகத் தோன்றுவனேல் காளகண்டா நாயேனுக்
     கெல்லா நலமுமுள தே.

உரை:

     கரிய கழுத்தையுடைய சிவனே, குற்றமுடைமையால் ஏசப்படுகின்ற மனிதனாக ஏன் பிறந்தேனோ? சிவத்தொண்டர்களின் ஆடையை வெளுக்கும் வண்ணான் துறைக் கல்லாகத் தோன்றாது போயினேன்; வண்ணான் துணிவெளுக்கும் கல்லாகத் தோன்றியிருப்பேனாயின், நாயினேனுக்கு நலம் பலவும் உளவாம் எ.று.

     குற்றமுடைமைபற்றி ஒருவரை ஏசுவது உலகியல். ஏசுதல் - வைதல்; இஃது ஏசு என முதனிலைத் தொழிற் பெயராய் நின்றது. ஒலித்தல் - பலரும் செவியிற் கேட்கப் பேசுதல். ஏசொலித்தலை ஒரு சொல்லாகக் கொண்டு வசை கூறலாக உரைப்பினும் அமையும். மனிதன் - மனுஷன், மானுடன், மானிடன் என்றெல்லாம் இச்சொல் வழங்கும். தவறு செய்த மனிதனைக் காண்போர் பலரும் வைவது பற்றி, “ஏசொலிக்கும் மானிடனாய் ஏன் பிறந்தேன்” என்று கூறுகின்றார். குணமும் குற்றமும் கண்டு குற்றமுடைமைபற்றி எள்ளி இகழ்வதும் ஏசுவதும் மக்களினத்துக்குள்ள தனிப்பண்பு. குணமேயுடையார் மக்களினத்தில் இன்மையால் “ஏசொலிக்கும் மானிடனாய் ஏன் பிறந்தேன்” என்று வருந்துகின்றார். சிவனுடைய திருவடித் தொண்டருடைய ஆடையைத் துவைக்கும் கல்லாக இருந்தால் சிவத்தொண்டு புரிந்த நற்பேறு கிடைக்கும்; அதற்குரிய வாய்ப்பில்லாமை நிலைக்கின்றமையின், “தொண்டர்கள் தம் தூசொலிக்கும் கல்லாகத் தோன்றிலனே” என்று உரைக்கின்றார். தூசொலித்தல் - உடையைத் துவைத்தல். தூ சொலிப்பான் கல்லாகத் தோன்றினால், குணமோ குற்றமோ காண்பதும், குற்றமுடைமைகண்டு இகழ்ந்து ஏசுவதும் இல்லாமையே யன்றிக் கல்லுக்குரிய மதிப்புக் குன்றாமை பற்றி “எல்லா நலமும் உளது” எனக் கூறுகின்றார்.

     இதனால், குற்றமுடைமைபற்றி ஏசப்படாத கல்லுக்குள்ள நன்மதிப்பு மனிதனுக்கு இல்லாமை நினைந்து முறையிட்டவாறு.