72
72. குணமே வடிவானவன் இறைவன். குற்றமும் குணமும் உடையவர் மக்கள். மக்களின் குற்றம் பொறுத்துக்
குணம் கொண்டு அருள்புரிவது அவனது அருட்செயல். மேலும் குற்றம் பல செய்யினும் மக்களைப் போல
வெகுண்டு குற்றமுடையாரைக் கடிந்து ஒறுத்தல் இல்லை. பல பெருங்குற்றம் செய்தவரும் மனம் மாறி
அவனை வேண்டுவரேல் சினமும் வெறுப்புமின்றி அருள்புரிபவன். அவனுடைய நலங்களை எண்ணிய வள்ளலார்,
‘பிறரைப் பற்றி அம்பலும் அலரும் பொய்யும் புகலும் இயல்புடைய நீ அவற்றை அறவே விட்டாலன்றி
ஆதரியேன்’ என்று என்னைக் கைவிட்டால், எனக்கு உய்யும் வழியில்லையெனச் சிவன்பால் முறையிடுகின்றார்.
2039. குற்றம் பலசெயினுங் கோபஞ் செயாதவருள்
சிற்றம் பலமுறையுஞ் சிற்பரனே - வெற்றம்பல்
பொய்விட்டால் அன்றிப் புரந்தருளேன் என்றெனைநீ
கைவிட்டால் என்செய்கேன் காண்.
உரை: குற்றங்கள் பலவற்றைச் செய்யினும் மனத்திற் சினம் கொள்ளுதல் இல்லாத திருவருட் பொலிவையுடைய சிற்றம்பலத்தின்கண் உள்ள ஞானத்தால் மேலாய பெருமானே, பொருளில்லாத அம்பல்மொழியும் பொய்யுரையும் விட்டொழித்தாலன்றி ஆதரவு செய்யேனென நீ என்னைக் கைவிடுவாயாயின் என்ன செய்வேன்? எ.று.
குற்றம் செய்பவரைக் காணின் தொடர்பில்லாத ஏதிலாரும் சினம் கொண்டு ஏசுவர். சிவபெருமான் எத்தனை குற்றங்கள் செய்யினும் எங்கும் நிறைந்திருத்தலால் கண்டிருந்தும் வெளிப்பட வந்து சினந்து கொள்வதில்லை; அதனால் “குற்றம் பல செய்யினும் கோபம் செய்யாத அருட்பரனே” என வுரைக்கின்றார். 'சிற்றம்பலம்' என்பது பிற்காலத்தே சிதம்பரம் என மருவிற்று; மருவிய அச் சொல்லையும் வடமொழித் தொடராகக் கொண்டு, சித் அம்பரம் எனப் பிரித்து ஞான ஆகாசம் எனப் பொருள் கூறுவாராயினர். சிற்றம்பலத்தின்கண் அருட்கூத்து ஆடியவண்ணம் இருத்தல்பற்றி “அருட்சிற்றம்பலம்” என்றும், அக்கூத்தும் ஞானநாடகம் எனப்படுவதால் “சிற்பரனே” என்றும் பரவுகின்றார். சிற்பரன் என்பது சித் பரன் எனப் பிரிந்து ஞானத்தால் மேலானவன் என்று பொருள் தருகிறது. அம்பல் - பழிப்புரை. பொருளாகிய உள்ளீடில்லாதது என்றற்கு “வெற்றம்பல்” என விளம்புகிறார். அம்பலும் பொய்யும் விடலாகாதவாறு ஒட்டிக்கிடக்கும் உருவுடையேனாதலால், இவ்விரண்டையும் “விட்டாலன்றிப் புரந்தருளேன்” என்று கருத்திற் கொள்ளுதலோ வாயாற் சொல்லுதலோ கூடாது என்று வேண்டுகின்றார். கருத்திற்கொண்டு என்னைப் புறக்கணித்தொதுக்குவையாயின் யான் செய்வதொன்று மின்றிக் கெடுவேன் என முறையிடுவாராய், “எனை நீ கைவிட்டால் என் செய்வேன், காண்” என்று மொழிகின்றார்.
இதனால், விடலாகாத ஒன்றை விடுக என் வற்புறுத்தல் நன்றன்று என விண்ணப்பித்தவாறு.
|