73
73. சிவனது நல்லருள் தமக்கு நன்கு எய்தாமையை எண்ணுகின்றார். வள்ளற் பெருமான். தம்முடைய குணம்
செயல்களை நினைந்து நோக்கித் தமக்கு அருளின் உண்மையடியார்க்கு உள்ளத்தே ஐயறவு உண்டாகும்
போலும் எனக் கருதுகின்றார். அதற்குக் காரணம் உலகில் தீயகுணத்தார் யாவரும் அவருடைய மாணவர்கள்
என்றும், அவருடைய தீய குணத்திற்கு எல்லையில்லை யென்றும் சொல்லி வேண்டுகின்றார்.
2040. தீக்குணத்தார் யாவருமென் சீடரெனில் என்னுடைய
தீக்குணத்தின் எல்லைஎவர் தேர்கிற்பார் - ஊக்கமிகு
நல்லோர்க் களிக்கு நதிச்சடையோய் எற்கருளில்
எல்லோர்க்கும் ஐயுறவா மே.
உரை: தீய குணமும் செயலுமுடையார் அனைவரும் எனக்குச் சீடர் என்பேனாயின் என்பாலுள்ள தீயபண்புக்கும் செய்கைக்கும் உற்ற எல்லையை யாவர் அளந்தறிய வல்லார். இஃதிவ்வாறாக, நீயோ, நற்பண்புடையார்க்கே அருள் புரிபவனும் கங்கை நதியைச் சடையிலே தாங்கியருள்பவனும் ஆவாய்; என்பால் பரிவு கூர்ந்து அருள் செய்வாயாயின், எல்லாருள்ளத்திலும் ஐயமுண்டாகுமே என நினைந்து அருளாதிருக்கின்றாய் போலும், எ.று.
தீய குணம் பிறப்புச்சூழல், இனச்சார்பு ஆகியவற்றால் செயற்கையாய் உண்டாவது; செயற்கை காரணமுற்று; அவற்றைப் பிறர்பால் எய்துவிப்பதற்கு நலன் செய்து காட்டும் ஆசிரியன்; அப்பிறர் பலரும் என் மாணவராவர் என்பார், சுருக்கமாக, “தீக்குணத்தார் யாவரும் என் சீடர்” என்றும், இதனால், என்பாலுள்ள குணக்கேட்டின் எல்லையை நீயறிய வல்லாயேயன்றிப் பிறர் எவரும் இல்லை என்றற்கு, “என்னுடைய தீக்குணத்தின் எல்லை எவர்தேர் கிற்பார்” என்றும் தெரிவிக்கின்றார். நல்லோர் உயர்தற்குரியராதலின், அவர்களை “ஊக்குமிகும் நல்லோர்” என்றும், அவர்களை யூக்கி யுயர்த்துவது இறைவன் அருட்செயலாதலால் “நல்லோர்க்கு அளிப்போய்” என்றும், கங்கை நதியைச் சடையில் கொண்டதும் அத்தகைய அருட்செயலாதல் பற்றி அதனையும் உடன் சேர்த்து, “நல்லோர்க்களிக்கும் நதிச் சடையோய்” என்றும் எடுத்துரைக்கின்றார். “நல்லோர்க்கே” என்றவிடத்துப் பிரிநிலை ஏகாரம் தொக்கது. நற்பண்பில்லாத எனக்கருள்வது எல்லோரும் ஐயுறுதற் கேதுவாம் என்பது புலப்பட, “எற்கருளில் எல்லோர்க்கு மையுறவாமே” எனவுரைக்கின்றார். இதனை நினைந்து அருளாதிருக்கின்றாய் போலும் என்பது குறிப்பெச்சம்.
இதனால், இறைவன் அருள் எய்தாமைக்குக் காரணம் ஆராய்ந்தவாறு.
|