74
74. இன்பமின்றித் துன்பத்தியே கிடக்கும் தமது நிலையை எண்ணியவர்,
இவ்வாறு இருத்தல் வேண்டுமென இறைவன் பிறக்கும் போதே தலையில் அமைத்துவிட்டான் எனத் துணிந்து
அவனை நோக்கி, “இவ்வாறு அமைத்துவிட்டாயே; வண்கண்மையில்லாத நின் அருள் உள்ளம் அந்நாளில்
இங்ஙனம் அமைக்க எவ்வண்ணம் இசைந்ததோ அறியேன் என இப்பாட்டில் சிவனிடம் தெரிவித்துக்
கொள்கின்றார்.
2041. இன்படையான் றன்புடையான் என்றேழை யேன்தலைமேல்
அன்புடையாய் நீயமைப்பித் தாயிதற்கு - வன்படையா
தெவ்வண்ணம் நின்னெஞ் சிசைந்ததோ அந்நாளில்
இவ்வண்ணம் என்றறிகி லேன்.
உரை: அன்புடைய பெருமானே, இன்பமெய்தான், அஃது எய்தாதவன் பக்கலே சூழ்ந்திருப்பவன் என்று அறிவில்லாதவனாகிய என் தலையில் நீ அமைத்திருக்கின்றாய்; இவ்வாறு அமைத்தற்கு வேண்டும் வண்கண்மை நின் நெஞ்சம் கொள்ளாது; எவ்வாறு நெஞ்சம் அந்நாளில இசைந்தது? இங்ஙனமென்று என்னால் அறிய முடியவில்லை. எ.று.
அன்பே ஈசற்குச் செல்வமாதல் தோன்ற, “அன்புடையாய்” என்று விண்ணப்பிக்கின்றார். இன்பமேயின்றி, இன்பமில்லாரையே சூழ்ந்திருக்கும் எனது நிலையைப் பல்வகையாலும் எண்ணிப் பார்த்ததில், யானே செயற்கையாய் அமைத்துக் கொண்டதன்று; அறிவுடைய எவனும் இன்பத்தை விரும்புவானேயன்றி வேண்டா, என விலக்கமாட்டான்; ஆதலால், என்னை இவ்வுலகிற் பிறப்பித்தகாலை இறைவனே இவ்வாறு அமைந்திருத்தல் வேண்டும் என்று தெளிய விளங்கிற்று. இக்கருத்தால், “இன்படையான் தன்புடையான் என்று ஏழையேன் தலைமேல் நீ அமைப்பித்தாய்” என்று தெரிவிக்கின்றார்; ஏழை - அறிவில்லாதவன். ஏழையாதலால் என் தலை ஏற்ற இடமாயிற்று என்றற்கு “ஏழையேன் தலைமேல்” என்று குறிக்கின்றார். அன்புடையனாகிய உனக்கு உள்ளத்தே வன்கண்மையுண்டாக இடமில்லை என்பாராய், “இதற்கு நின் நெஞ்சு வன்படையாது” எனக் கூறுகின்றார். என்னைப் பிறப்பித்த அந்நாளில் வன்கண்மையே யில்லாத நின்னெஞ்சு இவ்வாறு என் தலையில் விதித்தமைப்பதற்கு இசைந்தது எங்ஙனம் என்பாராய், “அந்நாளில் எவ்வண்ணம் நின்னெஞ்சு இசைந்ததோ?“ என்று வினவுகின்றார். இதனை நின்பால் முறையிடுதற்கு முன், யானும் நன்கு எண்ணி அறிய முயன்றேன்; ஒன்றும் புலனாகவில்லை என்பது இனிது விளங்க “இவ்வண்ணம் என்றறிகிலேன்” எனவுரைக்கின்றார்.
இதனால், இன்பமில்லாமைக்கு ஏது தலைவிதி என்னும் கொள்கை சிந்திக்கப்பட்டவாறு.
|