75
75. சிவபெருமான் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை; மற்றைத்
தேவர்க்கும் மக்களுக்கும் பிறவுயிர்களுக்கும் பிறப்பும், இறப்பும் உண்டு என்று நூலோர் கூறுவதை நினைக்கின்றார்
வள்ளலார். பிறப்பெடுத்த எல்லாவற்றினும் தனது பிறப்பு பொல்லாதது என்றும், அதைவிடப் பேய்ப்
பிறப்பு ஏழுமடங்கு நல்லது என்றும் உரைக்கின்றார். உலகம் வஞ்சம் நிறைந்தது என்றறிந்து தேகத்தை
மறைத்துக்கொண்டு மண் மேல் அடி வையாமல் அச்சத்துடன் சிவனோடு உடனிருந்து கூத்தாடுகிறது எனக்
காரணம் காட்டுகிறார். அது வருமாறு.
2042. ஏய்ப்பிறப்பொன் றில்லாதோய் என்பிறப்பின் ஏழ்மடங்கோர்
பேய்ப்பிறப்பே நல்ல பிறப்பந்தோ - வாய்ப்புலகம்
வஞ்சமெனத் தேக மறைத்தடிமண் வையாமல்
அஞ்சிநின்னோ டாடும் அது.
உரை: உயிர்கட்குப் பொருந்தும் பிறப்பு ஒன்றும் இல்லாத பெருமானே, என் பிறப்பைவிடப் பேய்ப்பிறப்பு ஏழு மடங்கு நல்ல பிறப்பாகும். எங்ஙெனமெனில் வாழ்வதற்கு வாய்ந்த வுலகம் வஞ்சம் பொருந்தியது எனக் கருதித் தன் உடலை மறைத்துக் காலடியை மண்மேல் வைக்காமல் அஞ்சி நின்னோட அப்பேய் ஆடுகிறது. எ.று.
உயிர் உடம்பொடு கூடிப் பொருந்துவது பிறப்பென்றற்கு “ஏய்ப்பிறப்பு” என்று கூறுகின்றார். ஏய்பிறப்பு - ஏய்ப்பிறப்பு என வந்தது. சிவபெருமான் பிறந்திறந்ததாக ஒரு வரலாறும் கிடையாது; அதுபற்றி, “பிறப்பொன்று இல்லாதோர்” என உரைக்கின்றார். “எல்லார் பிறப்பும் இறப்பும் இயற்பாவலர்தம், சொல்லால் தெளிந்தோம் நம் சோணேசர் - இல்லிற் பிறந்த கதையும் கேளேம் பேருலகில் வாழ்ந்துண்டிறந்த கதையும் கேட்டிலோம்” என்று பெரியோர் உரைப்பது காண்க. உயிர்கள் வாழ்தற்கென வாய்த்த உலகமென்றற்கு “வாய்ப்புலகம்” எனப்படுகிறது. தன்கண் வாழ்வாரைப் பிரியாவகை மயக்கி வஞ்சனையாற் பிணித்துக்கொள்வதுபற்றி “உலகம் வஞ்சம்” எனப் பேயும் கருதுகிறது என வள்ளலார் கூறுகின்றார். பேய் உண்டென்பார் உளராயினும் அதன் உடலுருவைக் கண்டவர் இலர்; காணாமைக்குக் காரணம் இது என்பாராய், அது தன்னை மறைத்துக் கொண்டுள்ளது என்று விளக்குதற்குத் “தேகம் மறைத்து அடிமண் வையாமல்” என இயம்புகிறார். வஞ்சவுலகத்தில் அடிவைத்தல் தீது என்ற கருத்தால் பேய், “அடிமண் வையாமல் அஞ்சி” என்றும், மக்களோடு வாழ்தற்கு அஞ்சி, இறைவனோடு ஆடுகிறது என்பார், “நின்னோடும் ஆடும் அது” என்றும் சொல்லுகின்றார்.
இதனால், மக்கட் பிறப்பினும் பேய்ப்பிறப்பு நன்றெனத் தெரிவித்தவாறு.
|