76
76. சிவத்தொண்டர்களின் பெருமை நலம் நிறைந்தது. சிவபரம் பொருளைக் கண்ட அப்
பெருமக்களின் திருவடியில் ஒட்டிய மண் பொடியைக் கண்டவர்கள் சிவன் திருவடி கண்டாரும் திருவுருவைக்
கண்டாருமாவர்; அவர்கள் பிணி மூப்புச் சாக்காடுகளால் துன்புறார் என்று உலகவர்க் கறிவுறுத்த எண்ணி
இப் பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்.
2043. கோடும் பிறைச்சடையோய் கோளுங் குறும்புஞ்சாக்
காடும் பிணிமூப்புங் காணார்காண் - நீடுநினைக்
கண்டார் அடிப்பொடியைக் கண்டார் திருவடியைக்
கண்டார் வடிவுகண்டார் கள்.
உரை: வளைந்த பிறைத் திங்களைச் சடையிற் கொண்ட சிவபெருமானே, நெடிது முயன்று, நின்னைக் கண்ட பெருமக்களின் திருவடிப்பொடியைக் கண்ட மேலோர் திருவடியைக் கண்ட நல்லோரும் சிவன் திருமேனியைக் கண்டவருமாவர். அவர்கள் தீய கொள்கைகளும் குறும்பு செய்தலும் நோயுறுவதும் முத்து விளிதலும் ஆகிய துன்பங்களை எய்தமாட்டார்கள். எ.று.
பிறைத் திங்கள் வளைந்திருப்பது பற்றிக் “கோடும்பிறை” எனப்படுகிறது. கோள் - கொள்கை. இங்கே துன்பத்துக் கேதுவான தீய கொள்கைகளைக் குறிக்கின்றது. குறும்பு - மாறாயவற்றைச் செய்து மனம் நோவச் செய்வது. மூப்பு இயல்பிலேயுளதாவது எனினும், மெய்வலி குன்றி நோய் செய்தலால் மூப்பும் துன்பவேதுக்களில் ஒன்றாகக் கூட்டியுரைக்கப் படுகிறது. திருவருள் ஞானத்தால் சிவனைக் கண்ட அடியார்க்கு அடியார் பெருமை கூறியவாறு.
|