77

      77. பல்வேறு அண்டங்கட்கும் வாழும் உயிர்கட்கும் தேவர்கட்கும் திருமால் முதலிய தேவதேவர்க்கும் முழு முதல் ஆதாரம் சிவபெருமான். அவன் அன்று கடலிலெழுந்த நஞ்சினையுண்டிராவிட்டால் எல்லாம் அழிந்து மறைந்திருக்கும் என்று வள்ளலார் இப் பாட்டின் கண் கூறி மகிழ்கின்றார்.

2044.

     மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங்
     கோலெங்கே வானோர் குடியெங்கே - கோலஞ்சேர்
     அண்டமெங்கே அவ்வவ் வரும்பொருளெங் கேநினது
     கண்டமங்கே நீலமுறாக் கால்.

உரை:

     சிவபெருமானே, உன்னுடைய திருக்கழுத்து அக்கடல்விடத்தையுண்டு கருமை நிறம் பெறாதொழிந்திருந்தால், திருமால் எங்கே; பிரமனுடைய உயர்ந்த வாழ்வு என்னாகியிருகும்; இந்திரனுடைய செங்கோலாட்சிக்கு இடமேது; வானவர் குடியிருந்து வாழும் வாழ்வு இருந்திருக்குமா? அழகிய அண்டங்கள் பலவும் அழிந்திருக்குமன்றோ; ஆங்காங்குள்ள அரிய பொருள்கள் என்னவாகியிருக்கும், எ.று.

     சிவனது திருக்கழுத்தைத் திருநீலகண்டம் என்பதன் கருத்தை விளக்க வந்த சேக்கிழார் பெருமான், புவனங்கள் உய்ய ஐயர் பொங்கும் நஞ்சு உண்டார் என்றும், உட்சொல்லாவாறு தகைந்து கழுத்தில் தரித்தார் என்றும் உரைக்கின்ற நலம் வியந்து வள்ளற்பெருமான் இங்கே இவ்வாறு கூறுகின்றார். கடல் கடைய வெழுந்த நஞ்சம், கடைந்த தேவர்களையும் அவர்கள் வாழும் உலகங்களையும் அழிக்க நின்றது கண்டு, அதனையடக்கும் வலியின்றித் தேவர்கள் வருந்தினமையின், அதனை நினைந்து காக்கும் தெய்வமாகிய திருமாலும், படைக்கும் தெய்வமாகிய பிரமனும், உலகபாலர் உருவாகிய இந்திரனாகிய தெய்வமும் வாழ்விழந்து இறந்து சாம்பராயிருப்பர் என்றற்கு, “மால் எங்கே வேதன் உயர் வாழ் வெங்கே இந்திரன் செங்கோல் எங்கே” என்றும், அமுது உண்டு நெடிது வாழவிரும்பிய வானவர் வாழ்வும் கெட்டழிந்திருக்கும் என்பதும புலப்பட “வானோர் குடியெங்கே” என்றும் வகுத்து மொழிகின்றார். இந்திரபதம் முதலாகக் கூறப்படும் பதங்கள் பலவற்றுள்ளும் மிக மேலானது பிரமபதம் எனவும், அங்கு இருப்பவன் பிரமன் எனவும் புராணங்கள் உரைத்தலின், அதனை “வேதன் உயர்வாழ்வு” என்று சிறப்பிக்கின்றார். பிரமன் எஞ்ஞான்றும் வேதமோதுபவனாதலால், “வேதன்” எனப்படுகின்றான். வானுறையும் தேவர்களும் நல்லது செய்து இன்புறுதலும், தீது செய்து இன்புறுதலும் உண்மையின், அவர்கள் அவ்வப்பயனை நுகரச் செய்வது இந்திரன் அரசியற் செயலாதல் விளங்க, “இந்திரன் செங்கோலெங்கே” என்றும், வானவர்கள் அவன் குடைநிழலில் வாழும் குடிகளாவது புலப்பட, “வானோர் குடியெங்கே” என்றும் சொல்லுகின்றார். அண்டங்கள் எண்ணிறந்தனவாயினும், எழில்மிக்கன என்பது பற்றிக் “கோலம் சேர் அண்டம்” எனவும், அவ்வவ்வண்டங்களில் வாழ்பவர் அரிது முயன்றும் பெறும் பொருள் வகைகளை “அவ்வவ் வரும் பொருள்” எனவும் குறிக்கின்றார். இறைவனே, நினது கண்டம் நீலம் உறாக்கால் நிலைமை என்னாகியிருக்கும் என வள்ளலார் நினைப்பதுபோல திருக்குற்றாலத்தில் திருமால் சிவபிரானான வரலாற்றில் அகத்தியர், திருமால் அடியார்களை நோக்கி,

          “பாரோ டும்விண்ணோர்கள் பரர்தோடம்
               புரந்தரனார் பதிவிட்டோடத்
          தோரோடும் கதிரோட மதியோட
               விதியோடத் திருமால் மேனித்
          காரோடத் தொடர்ந்தோடும் கடல்விட்டத்தைப்
               பரமனுண்டு காவாவிட்டால்
          பிழைப்பீர்                         (குற்றாலத்தல. திருமால் 90)

என்று அறிவுறுத்துவது காண்க.

     இதனால், கடல்விடமுண்ட சிவனது கருணைத்திறம் நினைக்கப்பட்டவாறு.