78
78. சிவனுடைய வீரச்செயல்களை அறிஞர்களை அறிஞர்க்ள உரைக்கின்றார்கள். மார்க்கண்டேயனுக்காகச்
சிவன் தோன்றி யமனைக் காலால் உதைத்து ஒழித்த வரலாறு நம்முள்ளத்தை எல்லையற்ற உவகையிலாழ்த்தி
ஊக்குகின்றது. இதனை எண்ணும்போதெல்லாம் பெருமிதத்தால் செம்மாப்புறும் வள்ளலார், எவ்வேளியில்
நமன் நம்மிடம் வருவானோ என எண்ணி மனம் அழுங்குவதுண்டென்பதை இப்பாட்டால் அறிவிக்கின்றார்.
2045. எவ்வேளை யோவருங்கூற் றெம்பாலென் றெண்ணுகின்ற
அவ்வேளை தோறும் அழுங்குற்றேன் - செவ்வேளை
மிக்களித்தோய் நின்கழற்கால் வீரத்தை எண்ணுதொறும்
எக்களித்து வாழ்கின்றேன் யான்.
உரை: செவ்வேளாகிய முருகப் பெருமானை அளித்தருளிய நினது திருவடி வீரத்தை எண்ணும் போதெல்லாம் பெருமிதமுற்று வாழ்கின்ற யான், எம்முடைய உயிரைக் கொள்ளற்கு எமன் எம்மிடத்து எப்பொழுது வருமோ என்று எண்ணுகின்ற அப்பொழுது தோறும் அச்சத்தால் மனம் வருந்துகின்றேன்.
அசுரர்களின் துன்பம் பொறாது வருந்தி வேண்டியதற்கு இரங்கி முருகப் பெருமானை அளித்தாரெனப் புராணம் கூறுதலால், “செவ்வேளை அளித்தோய்” என்றும், திருமால் முதலிய தேவதேவர்களினும் மேம்பட்டு விளங்கத் தோற்றுவித்தமை புலப்பட, “செவ்வேளை மிக்கு அளித்தோய்” என்றும் இசைக்கின்றார். நெஞ்சொன்றித் திருவடி வழிபட்டார் பொருட்டுக் காலனைக் காலால் வீழ்த்தியருளிய திறம் நினைக்கும்போது நாமும் அத்தகைய அருள் பெறலாம் என்ற நினைவு தோன்றிப் பெருமிதம் பயத்தால் உணர்ந்து, “கழற்கால் வீரத்தை எண்ணுதொறும் எக்களித்து வாழ்கின்றேன் யான்” என விளம்புகின்றார். சிவன் நமனைக் காலால் வீழ்த்திய செய்தியை, “வாமச் சேவடி தன்னால் சிறிது உந்தி உதைத்தான் கூற்றன் விண்முகில்போல் மண்ணுற வீழ்ந்தான்” (மார்க்கண். 253) என்று கந்தபுராணம் உரைக்கின்றது.
இதனால், சிவனடியே சிந்திக்கும் திருவுடையோரக்கும் நமனையஞ்சும் நிலைமையுண்மை உணர்த்தியவாறு.
|