79

       79. சிவஞானச் செல்வர்களின் நற்சங்கம் சிவஞானம் தந்து சிவனை மறவாத மாண்பைத் தருகிறது; மற்றைத் தீயவர் கூட்டத்தைச் சேர்ந்தால் நலமின்றிக் கெடுவதுறுதி என்று தெளிகின்றார் வள்ளலார்.

2046.

     துற்சங்கத் தோர்கணமுந் தோயாது நின்னடியார்
     சற்சங்கத் தென்றனைநீ தான்கூட்டி - நற்சங்கக்
     காப்பான் புகழுன் கழற்புகழைக் கேட்பித்துக்
     காப்பாய் இஃதென் கருத்து.

உரை:

     சிவபெருமானே, தீயவர் கூட்டத்தில் கணப்பொழுதும் சேர்ந்திராதபடி காத்து நின்னுடைய அடியார்களாகிய நல்லோர் கூட்டத்தில் இருக்குமாறு என்னைச் சேர்த்து நல்ல தமிழ்ச் சங்கக் காவலனாய் நக்கீரர் புகழும் உன் திருவடிப் புகழைக் கேட்குமாறு செய்து அடியேனைக் காப்பாயாக; இஃது எனது கருத்து. எ.று.

     நிலத்தில்பால் நீர் நிறமும் சுவையும திரிவதுபோல மக்களும் தாந்தாம் சேரும் இனத்தின் இயல்பால் குணமும் செய்கையும் திருவர் என்று திருவள்ளுவர் முதலிய சான்றோர் கூறுவர்; அவர் போலவே மெய்கண்டார் முதலிய சான்றோர்,. சிவஞானச் செல்வர்களான அடியார் கூட்டமே வேண்டுவது; அல்லாதார் அஞ்ஞானத்தை நல்குவரென வற்புறுத்துகின்றார்கள்; அது நினைந்தே வடலூர் வள்ளல், “துற் சங்கத்து ஓர்கணமும் தோயாது நின்னடியார் சற்சங்கத் தென்றனை நீதான் கூட்டுக” என வேண்டுகின்றார். 'நற்சங்கம்' என்றது, மதுரையில் சிறந்து விளங்கிய தமிழ்ச் சங்கத்தை. அதன்கண் இருந்து தமிழ்ப் புலமை நடாத்திய சான்றோர் பலரும் சிவஞானச் செல்வர் என்பர். அவர்களை,

          “தரணியில் பொய்ம்மையிலாத் தமிழ்ச்
               சங்கமதிற் கபிலர்
          பரணர் நக்கீரர் முதல் நாற்பத்
               தொன்பது பல்புலவேரர்
          அருணமக்கீயும் திருவாலவாயரன்
               சேவடிக்கே
          பொருளமைத் தின்பக் கவிபல
               பாடும் புலவர்களே”               (திருத்தொண். 49)

என்று நம்பியாண்டார் நம்பி கூறுகின்றார். இச்சங்கத்துத் தலைமைப் புலவராய், அதன் சிறப்பைக் காத்தவர் நக்கீரராதலின், அவரை “நற்சங்கக் காப்பான்” என்றும், அவர், பல பாட்டுக்களில் சிவனுடைய திருவடியைச் சிறப்பித்துப் பாடுதலால், “சங்கக்காப்பான் புகழ் உன்கழற் புகழைக் கேட்பித்துக் காப்பாய்” என்றும் விண்ணப்பம் செய்கின்றார்.

     இதனால், நற்சங்கம் சேர்ந்து செய்தற்குரிய பணியாதென்பார்க்கு நக்கீரர் புகழ்ந்து பாடிய திருவடிப் புகழை ஓதக்கேட்பது என உரைத்தவாறு.