80
80. சிவத்தொண்டர்க்குத் தொண்டு செய்வது சிவனுக்குச் செய்யும் பெருந்தொண்டென்று
குறிக்கின்ற வள்ளற் பெருமான், சிவன்பால் சிந்தையைச் செலுத்தி, “இறைவனே, சிவத்தொண்டர்க்கு
வேண்டும் தொண்டுகளைச் செய்தற்கு என் மனம் காதலிக்கிறது; அது கைகூடுதற்கு நின் அருள் இன்றியமையாதது;
அதனை அன்போடு எனக்கு நல்குக என இப் பாட்டின்கண் வைத்து வேண்டுகின்றார்.
2047. என்னமுதே முக்கண் இறையே நிறைஞான
இன்னமுதே நின்னடியே ஏத்துகின்றோர் - பொன்னடிக்கே
காதலுற்றுத் தொண்டுசெயக் காதல்கொண்டேன் எற்கருணீ
காதலுற்றுச் செய்தல் கடன்.
உரை: மூன்று கண்களையுடைய இறைவனே, நிறைந்த ஞானத்திரளாகிய இனிய அமுது போன்றவனே, எனக்கு அமுதானவனே, நின் திருவடியை ஏத்துகின்ற சான்றோர்களாகிய சிவத்தொண்டர் திருவடிக்கே அன்பு மிகுந்து தொண்டு செய்யக் காதல் கொண்டுள்ளேன்; ஆதலால் எளியனாகிய என்பால் அன்புகூர்ந்து நீ எனக்கு அருள்புரிவது கடனாகக் கொள்க. எ.று.
எங்கும் தங்கும் பரம்பொருள் என்னும் உண்மை விளங்க 'இறையே' என்றும், ஏனைத் தெய்வங்களின் வேறாகச் சிறப்பித்தற் பொருட்டு “முக்கண் இறையே” என்றும் மொழிகின்றார். “ஞானத்திரளாய் நின்ற பெருமான்” என்று திருஞானசம்பந்தர் முதலிய சான்றோர் உரைப்பதனால் “ஞானவின்னமுது” எனவும், நினைந்து நினைந்து பாடப்பாட இன்பம் ஊற்றெடுத்துப் பெருகி ஊக்குதலால் “என் அமுதே” எனவும் இயம்புகின்றார். தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியத்தைத் தாம் விரும்புகிற கருத்தை வெளியிடுகின்றாராதலால், “நின்னடியை ஏத்துகின்றோர் பொன்னடிக்கே காதலுற்றுத் தொண்டுசெயக் காதல் கொண்டேன்” என்று கட்டுரைக்கின்றார். சிவன் திருவடியை ஏத்துகின்ற பெரியோருடைய அடிகள் சிறப்புடையன என்றற்கு “ஏத்துகின்றோர் பொன்னடி” எனப் புகழ்கின்றார். தொண்டர் பொன்னடிக்குத் தொண்டு செய்ய உள்ளத்தே திருவடிபால் அன்பு மிக்குறுதலைப் புலப்படுத்தற்கே “பொன்னடிக்கே காதலுற்று” என்றும், பொன்னடிப்பாற் சென்றது போல அன்பு தொண்டின் பாலும் செல்வது தோன்றக் “காதல் கொண்டேன்” என்றும் தெரிவிக்கின்றார். இவ்விருப்பம் இனிது நிறைவுற வேண்டுமாயின் நினது திருவருள் இன்றியமையாதாதலால் “எற்கு நீ அருள்செய்தல் கடன்” என வற்புறுத்தகின்றார். அருளைச் செய்கின்ற போதும் நீ அன்போடு என்பால் செய்தல் வேண்டுமென வேண்டுவாராய், “காதலுற்றுச் செய்தல் கடன்” என வுரைக்கின்றார்.
இதனால், தொண்டர்க்குத் தொண்டு செய்யத் தோன்றிய விருப்பம் நிறைவுற நினது அருள் இன்றியமையாதெனத் தெரிவித்தவாறு.
|