81
81. சிவனை நினைக்கின்ற வள்ளற்பெருமான் சிவபெருமானுடைய ஒப்பற்ற தனிநலத்தை எண்ணி இன்புறுகின்றார்;
சிவனது நினைவின் கண் தோன்றும் ஒளி அவர்பால் ஒடுங்கியிருக்கும் பிழைகளை அவர்க்குப் புலப்படுத்துகிறது.
அவர். இறைவனே, என் பிழைகளை நோக்கி என்னைப் புறம் பழித்து விலக்குதல் கூடாது; நீயே அது செய்வாயாயின்,
என்போலும் மக்களினத்தார் யாது சொல்லமாட்டார்கள்; பிழை பொறுத்து ஆண்டருள்க என வேண்டுகின்றார்.
2048. ஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன்
பேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு
நின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால்
என்போல்வார் என்சொல்லார் ஈங்கு.
உரை: மக்களுள்ளும் தேவருள்ளும் ஒருவரும் நினக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமானே, உண்ணப்படாத அமுதமானவனே, அருட்கடலே, நாயினேனிடத்துள்ள வஞ்சங்களால் உண்டாகும் பிழைகளை நோக்கி நீ என்னைப் புறம்பழித்து விலக்குவாயாயின், என் போன்ற மக்கள் இவ்வுலகில் என்ன சொல்ல மாட்டார்கள்? எ.று.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனித்தலைமைப் பேரிறைவனாதல் இனிது விளங்க, “யாரேனும் நின்போல்வார் இல்லாதோய்” என்று கூறுகின்றார். திருவள்ளுவர் “தனக்குவமை யில்லாதான்” என்பர் திருநாவுக்கரசர் . “நின்னாவார் பிறரின்றி நீயேயானாய்” (பொது) என்று புகல்கின்றார். உண்ணப்படும் அமுதினும் வேறென்றற்கு “ஆராவமுதென்பது வெளிப்படை, கடல்போல் பெருகி அருளுடையன் என்பதற்கு “அருட்கடல்” என்று பரவுகின்றார். கொள்ளக்கொள்ளக் குறைபடாமை பற்றி “கடல்” என்று உவமையாகக் கூறப்பட்டது. “கொளக்குறைபடாமையின் முந்நீரனையை“ (பதிற் 90) எனச் சான்றோர் உரைப்பது காண்க. நினைவும் சொல்லும் செயலும் மாறுபட வொழுகுவது வஞ்சவினை; பன்முறையும் பிறப்பிறப்புகளில் உழன்றும் நீங்காமை பற்றி “பேராத வஞ்சப் பிழை” என்று சிறப்பிக்கின்றார். அதனால், இறைவனது திருவருள் எய்தாமை யுணர்ந்து, “வஞ்சப்பிழை நோக்கி நீயே புறம் பழித்தால்” எனப் புகல்கின்றார். முன்னே செலவிடுத்துப் பின்னே பழித்துரைத்தல் புறம் பழித்தலாம்; இங்கே கைவிடுதல் என்னும் பொருள் மேல் நிற்கிறது. என்போல்வார் என் சொல்வாரென்றது, ஆகாதன எல்லாம் எடுத்துரைப்பர் என்பதாம்.
இதனால், என்பாற் பிழைகள் பலவும் நீங்காமல் இருப்பது குறித்துப் புறம்பழித்து விலக்காமல் பொறுத்தாள வேண்டும்; இனிமேல் உலகில் என் போன்ற மக்கள் என்னைப் பழிப்பதுடன் நில்லாமல் நின்னையும் பழிப்பராதலால் அருளுதல் வேண்டுமென்று வற்புறுத்தியவாறு.
|