82
82. சிவனுடைய திருவருளைப் பெறற்கு நினைக்கின்றார் வடலூர் வள்ளலார். அதற்கேற்ற தகுதி தன்பால்
உளதா என்று எண்ணித் தனக்குள் ஆராய்கின்றார். செய்கைகளில் தீமையும் அதனால் தன்பால் பிழையும்
மிக்கிருப்பது காண்கின்றார். தீமையும் பிழையையும் நின் திருவுள்ளத்திற் கொள்வாயாயின், சிவனே,
யான் ஒன்றும் செய்ய இயலேன்; எனக்கு நின்னைத் தவிர உண்மையாக ஒரு துணையுமில்லை; அதனையும் நீ
நன்றறிவாய்; ஆதலால் எனக்கு வேண்டிய திருவருளைச் செய்க என்று இப்பாட்டைப் பாடுகின்றார்.
2049. மெய்யாக நின்னைவிட வேறோர் துணையில்லேன்
ஐயா அதுநீ அறிந்ததுகாண் - பொய்யான
தீதுசெய்வேன் தன்பிழையைச் சித்தங் குறித்திடில்யான்
யாதுசெய்வேன் அந்தோ இனி.
உரை: ஐயனே, மெய்யாகச் சொல்லுகின்றேன்; உன்னைவிட வேறு ஒருவரும் எனக்குத் துணையில்லை; அது நீ நன்கு அறிந்ததுதான்; பொய் முதலாகிய குற்றங்களைச் செய்பவனாகிய என் பிழையை நீ திருவுளத்திற் கொள்வாயாயின், எளியனாகிய யான், இனி, ஐயோ, யாது செய்வேன், எ.று.
நினது அருள்வேண்டி அல்லும் பகலும் பரவி நிற்கும் எனக்கு அதனை நல்கி ஆதரிக்கும் அருளாளர் வேறே இருப்பாராயின். நீ தாமதித்தலோ, மறுத்தலோ செய்யலாம்; தேவரீரைத் தவிர வேறு ஒருவரும் இல்லை; இது மெய்யான உரை என்பார், “மெய்யாக” என்றும், “நின்னைவிட வேறோர் துணையில்லேன்” என்றும் உரைக்கின்றார். “தாழ்வீழ்வார் பிறர்க்கு ஊன்றுகோலாகார்” என்பதுபோல, ஏனை மண்ணுலக மக்களும், விண்ணுறையும் தேவர்களும் பிழைசெய்து துன்புறுவதும் பிறந்திருந்து பேதுறுவதும் உடையராதலால் அவர் துணையாகார் என்பது உலகறிந்த செய்தி என்றற்கு, “அது நீ அறிந்தது காண்” எனத் தெரிவிக்கின்றார். பொய் கூறுதல் முதலிய குற்றங்களை “பொய்யான தீது” என்று குறிக்கின்றார். பிழை செய்வது என்பால் அறிந்தும் அறியாமலும் உளது; அதனை நீ திருவுள்ளத்தில் கொள்ளலாகாது என்று வேண்டுவாராய், “பொய்யான தீது செய்வேன் தன் பிழையைச் சித்தம் குறித்திடில்” என மொழிகின்றார். அந்தோ வினையே என்று மனம் வருந்துவதன்றிக் காப்பாவன வேறு யாதும் செய்ய வல்லேனல்லேன் என்பது தோன்ற, “அந்தோ யான் இனியாது செய்வேன்” என்றுமுறை யிடுகின்றார். தீது செய்தற்குரிய மயக்குணர்வு மிக்கிருப்பதுபோலச் செய்யாமைக்குரிய தெளிவு இல்லாமையின் பொறுத்தலே நீ செய்யற் பாலது என்பது குறிப்பு.
இதனால், பிழை பொறுத்து அருள் புரிதலைத் திருவுளம் பற்றுக என வேண்டிக் கொண்டவாறு.
|