83
83. தனது மனத்தின்கண் இருக்கும் எண்ணத்தை அறிந்திருந்தும் சிவபெருமான் இரக்கமின்றி இருப்பதற்குக்
காரணம் யாதாகலாம் என ஆராய்கின்றார். சிவபெருமான் என் மனத்தின் கண்ணே இருக்கின்றான்;
அதன்கண் உறைதலால் அதன் குணம் சிவனையும் பற்றிக் கொண்டது போலும்; இல்லையாயின் அப்பெருமான்
திருவுள்ளம் இரங்காமல் இராது என நினைந்து இப்பாட்டிற் பாடுகின்றார்.
2050. திண்ணம் அறியாச் சிறியேன் உளத்திருக்கும்
எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் -அண்ணலுன்பால்
நித்தம் இரங்காஎன் நெஞ்சமர்ந்த தாலோநின்
சித்தம் இரங்காச் செயல்.
உரை: அண்ணலே, திண்மையறியாச் சிறியேனாகிய என் உள்ளத்தில் இருக்கும் எண்ணத்தை யறிந்துகொண்டு திருவுள்ளம் இரங்காதிருக்கின்றாய் ; நின் சித்தம் இரங்காத செயலுக்குக் காரணம் நாளும் உன்னை நினைந்து உயிர்கள்பால் இரங்கும் இயல்பில்லாத என் நெஞ்சின்கண் நீ தங்கினதாற் போலும். எ.று
திண்ணம் - மெய்ம்மை. மெய்யல்லாதவை நினையின்றிக் கெடுதலும், மெய்யாவன திண்மையுற்று நிலைபெறுமதலும் இயல்பாதல்பற்றி, மெய்ம்மை திண்ணம் எனப்படுகிறது. திண்மையறியாமைக்கு ஏது தனது அறிவின் சிறுமை என்றற்கு, “அறியாச் சிறியேன்” என்று கூறுகின்றார். உளத்திருகும் எண்ணம் - மனத்தின்கண் நிறைந்து கிடக்கும் தவறான எண்ணங்கள். இறைவனாம் தன்மையால் உள்ளத்திலுள்ள எண்ணங்களை அறிவனாதலால், “உளத்திருக்கும் எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய்” என வுரைக்கின்றார். இரங்காமைக் கேதுவாகிய தீய பண்புகள் தமது எண்ணத்தில் தோய்ந்திருப்பதை உணர்கின்றமை பற்றி இவ்வாறு கூறுகின்றார். அறிந்தாய்; முற்றெச்சம். எல்லாவுயிரிடத்தும் இரக்கம் கொண்டு அருள்புரியும் இறைவன் திருவுள்ளம் இரக்கம் கொள்ளவில்லையென எண்ணி யுரைக்கின்றமை புலப்பட, “நின் சித்தம் இரங்காச் செயல்” என்றும், அதற்குக் காரணம் தமது நெஞ்சின் கொடுமை என்றற்கு “உன்பால் நித்தம் இரங்கா என் நெஞ்சு” என்றும் கூறுகின்றார். “இரங்குதல்” என்பது இங்கே நினைத்தல் என்னும் பொருளில் வந்துளது. நின் திருவுள்ளம் இரங்கியருளும் இயல்பிற்றாயினும், என் நெஞ்சில் நிறைந்த கொடுமை யெண்ணம், அதனிடையே தங்கும் நின்னுடைய திருவுள்ளத்தைக் கெடுந்தொழிந்தது; அதனால் இரக்கமில்லாமை நின்பால் உளதாயிற்று; அது நின் குறையன்று; சிறியேனது உள்ளத்திருக்கும் குறை என்பது குறிப்பு.
இதனால், சிறியேனுடைய உள்ளத்தெழும் கொடுமை யெண்ணம் இரக்கமே வடிவாய இறைவன் திருவுள்ளத்தையும் இரங்காவாறு செய்துவிட்டதெனத் தன்னைப் பழித்தவாறு.
|