84
84. சிந்திக்கும் தோறும் வள்ளற்பெருமான் தமது சிந்தையில் பிழைகளே காண்கின்றார்; வருத்தம்
மிகுகின்றார். சிவனை நோக்கி, “பெருமானே, வீணான நினைவுகளைக் கொண்ட நெஞ்சினையுடையவன் நான்;
அதனையுற்று நோக்கி அதன் பிழைகளைக் காணும்போதும் என் நெஞ்சமே என்னைத் தீயாய் எரிக்கிறது;
எனக்கே நிலைமையதுவாயின், நின் தூய நெஞ்சத்துக்கு அஃது எவ்வாறிருக்குமோ? சத்துக்கு அது எவ்வாறிருக்குமோ?
அதை நினைக்கின் என் மனம் வருந்துகிறது என்று இப்பாட்டால் தெரிவிக்கின்றார்.
2051. கொன்னஞ்சேன் தன்பிழையைக் கூர்ந்துற்று நானினைக்கில்
என்நெஞ்சே என்னை எரிக்குங்காண் - மன்னுஞ்சீர்
எந்தாய்நின் சித்தத்திற் கேதாமோ நானறியேன்
சிந்தா குலனென்செய் வேன்.
உரை: நிலைத்த புகழ் படைத்த பெருமானே, பயனில்லாத நெஞ்சினையுடைய யான் என்னுடைய குற்றங்களைக் கூர்ந்து நினக்குமிடத்து, என் நெஞ்சமே நெருப்பாய் நின்று என்னைச் சுட்டெரிக்குமென்றால், தேவரீருடைய திருவுள்ளத்துக்கு எவ்வாறு இருக்குமோ, யான் அறியேன்; நெஞ்சின் கொடுமையால் மயக்கம் உற்றிருக்கும் எளியனாகிய யான் யாது செய்வேன், எ.று
கொன் : பயனில்லை என்னும் பொருளில் வரும் இடைச்சொல். கூர்ந்து உற்று என்ற இரண்டும் ஒரு பொருள்மேல் வந்தன; “உயர்ந்தோங்கு செல்வம்” என்பதுபோல, நினைக்கில் என்பது நினைத்தலின் அருமை குறித்து நின்றது; நினைப்பதில்லை என்பது கருத்து. முன்னம் நினைத்திருந்தால் பிழையுண்டாகியிராது; இப்போது நினைக்கும்போது உண்டாகும் வருத்தத்தை யுரைக்கலுற்று, “என் நெஞ்சே என்னை எரிக்குங்காண்” என்று இயம்புகின்றார். எனக்கே இத்துணை வருத்தம் தோன்றுமாயின், நின் நன்னெஞ்சம் எத்துணை வேதனை எய்தும் என்பாராய், “நின் சித்தத்திற் கேதாமோ” எனவுரைக்கின்றார். ஆகுலம் - மயக்கம், “சிந்தாகுலம் உற்று” (கோவை 12) என்பதற்குப் பேராசிரியர் கூறிய உரை காண்க. என் சிந்தை வருத்தமிகுதியால் மயக்கமுற்றமையின் செய்வதறியாது தயங்குகின்றேன் என்பது விளங்கச் “சிந்தாகுலன் என் செய்வேன்” என்று தெரிவிக்கின்றார். சிந்தாகுலன் என்பது வடநூன் முடிபு.
இதனால், தமது நெஞ்சின் கொடுமையைத் தாமே நினைந்து வருந்தியவாறு.
|