85

      85. உலக மக்களில் பொன்னும் பொருளுமாகிய செல்வத்தின்பால் அன்புடையவரும் சிவன்பால் அன்புடையவரும் என இரு திறத்தார் உள்ளனர். இவர்களைக் கண்ட வள்ளலார் சிவனை நினைந்து “பெருமானே, நின் அன்பர், பொன்னன்பர் என்ற இவ்விருவரில் யாரிடத்தில் என்னைச் சேர்க்கக் கருதுகின்றாய்? பொன்னன்பர், அஃது அவர்பால் இருப்பினும் இல்லாதொழியினும் தம்மை வறியவராக எண்ணி நின்னையும் பிறரையும் வைவதே செயலாகவுடையவர்; நின் திருவுள்ளம் அறியேன் என்று இப் பாட்டில் தொகுத்து உரைக்கின்றார. 

2052.

     நின்னன்பர் தம்பால் நிறுத்துதியோ அன்றிஎனைப்
     பொன்னன்பர் தம்பால் புணர்த்துதியோ - பொன்னன்பர்
     வைவமே என்னும் வறியேன் அறியேனென்
     தெய்வமே நின்றன் செயல்.

உரை:

     என் தெய்வமாகிய சிவமே, எளியவனாகிய என்னை நின்பால் அன்புடைய நன்மக்கள் கூட்டத்தில் இருக்கச் செய்வாயோ; அல்லது பொன்னுக்கு ஆசை வைத்துழலும் செல்வரிடத்தே இரந்துய்யுமாறு சேர்ப்பிப்பாயோ, நின் செயல் வகையை யான் அறியேன்; நானோ, பொன்னும் பொருளுமாகியவற்றின்பால் அன்புடைய செல்வர்களைக் கண்டால் பொறாமையால் வைது திரியும் வறியன். எ,.று.

     சகளவடிவில் காட்சி தரும் சிவனாகிய தெய்வத்தை முன்னிலப் படுத்தி மொழியுமாறு விளங்க, “தெய்வமே” என்று செப்புகின்றார். சிவனடியார்களை “நின்னன்பர்” என்று சிறப்பிப்பவர், தம்மையும் அவர்களது திருக்கூட்டத்தில் சேர்க்க வேண்டுமென விழைகின்றமை விளங்க, “நின்னன்பர் தம்பால் நிறுத்துதியோ” என்று கேட்கின்றார். பொன்னும் பொருளும் விரும்பி அவற்றை அரிதின் முயன்று ஈட்டி அன்போடு பாதுகாத்து வாழும் செல்வர்களைப் “பொன்னன்பர்” எனப் புகல்கின்றார். செல்வர்களைச் சார்ந்து அவர்களைச் சிறப்பித்து வாழ்வது மக்களுலகின் இயல்பாதலால், “எனைப் பொன்னன்பர் தம்பால் புணர்த்துதியோ” என்று உரைக்கின்றார். வறுமையுற்றோருள், உழைப்பால் உயர்ந்து தாமும் செல்வராக முயல்வோர் சிலரும், செல்வரது செல்வம் காணப்பொறாது வடுவுரைத்து வைது திரிவோர் பலருமாக இருத்தலின், அவருட் பின்னோர் கூட்டத்தில் தம்மை இருத்திப் “பொன்னன்பர் வைவமே என்னும் வறியேன்” என்று மொழிகின்றார். வைது திரிவோம் என்பது 'வைவம்' என வந்தது. இப்பெற்றியோர் மீளா வறுமையிற் கிடந்து மெலிந்து வருந்துவது நினைக்கப்படுதலின், “என் தெய்வமே நின்றன் செயல் அறியேன்” என்று கூறுகின்றார்.

     இதனால், உலகியற் செல்வர்பாற் சேராது திருவருட் செல்வராகிய சிவனடியார்பாற் சேர்வது சிறப்பெனத் தெளிவுறுத்தவாறு.