86

      86. அருளாளர் உள்ளம் அதனை வேண்டுவோர்பால் குற்றம் குறை காணுதல் கூடாது. குற்றங்களால் என்னிடம் சிறுமையுளது. சிவபெருமானே, நீ என் சிறுமை நோக்காமல் உனது பெருமைக்குத் தக நினைந்தருளல் வேண்டும். அது நோக்கியே அடியேன் உள்ளேன். நின் திருவுள்ளம் எங்ஙனம் உளதோ, அறியேன். எனக்கு எப்போது அருள் செய்வாய் என்று இப்பாட்டில் வினவுகின்றார்.

2053.

     என்சிறுமை நோக்கா தெனக்கருளல் வேண்டுமென்றே
     நின்பெருமை நோக்கிஇங்கு நிற்கின்றேன் - என்பெரும
     யாதோநின் சித்தம் அறியேன் அடியேற்கெப்
     போதோ அருள்வாய் புகல்.

உரை:

     என்னுடைய பெருமானே, என்பால் உள்ள சிறுமைத் தன்மையைப் பாராமல் எனக்கு அருள்புரிதல் வேண்டுமென்று நயந்து, நினது பெருந்தன்மை யொன்றேயே நினைந்து இவ்வுலகில் வாழ்ந்திருக்கின்றேன்; நின்னுடைய திருவுள்ளம் யாதோ, தெரிந்திலேன்; அடியேனாகிய எனக்கு எப்போது அருள் செய்வாயோ, சொல்லியருள்க. எ.று.

     பெருமைக்குரிய பண்பனைத்துக்கும் எல்லையாயவன் என்றற்கு “பெரும” என்று புகழ்கின்றார். என்னை இவ்வுலகிற் பிறந்து வாழச் செய்த நின் பெருமையை நினைந்து நின்னைப் பரவிக் கொண்டிருக்கின்றேன் என்ற கருத்துப்பட, “நின் பெருமை நோக்கியிங்கு நிற்கின்றேன்” என இசைக்கின்றார். நீயும் நின் பெருமைக்குத் தகத் திருவருள் நாட்டத்தைப் பரப்பி யான் உய்திபெறுமாறு அருளல் வேண்டுமேயன்றி என் சிறுமைப் பண்பையும் அதனால் என்னிடத்துளவாகும் சிறு செயல்களையும் நோக்குதல் கூடாது என்பாராய், “என் சிறுமை நோக்காது எனக்கருள வேண்டும்” என்றும், அது நோக்கியே தான் வாழ்வதாகக் குறிப்பிற் புலப்படுத்தியும் உரைக்கின்றார். அடியேன் உள்ளத்தில் நிலவும் விழைவுகளை இப்போது எடுத்துரைத்தேனே யன்றி நின்னுடைய திருவுள்ளக் குறிப்பை அறிந்து கொண்டேனில்லை என்று தெரிவித்தற்கு “யாதோ நின் சித்தம் அறியேன்” எனவும், நீ அருளுவது தானும் எப்பொழுது நிகழுமோ, அதனையும் அறியேன்; அருள்கொண்டு உரைத்தருள்க என்பாராய் “எப்போதோ அருள்வாய் புகல்” எனவும் உரைக்கின்றார். ஓகாரத்தைப் பிரித்துக் கூட்டி “எப்போது அருள்வாயோ” என இயைத்துரைக்க.

     இதனால், கொள்வோன் தகுதி நோக்காது கொடை வழங்கும் நின்பெரும் தகுதி நோக்கி அருள்செய்க என விண்ணப்பித்தவர், அவ்வருளைச் செய்வதில் காலம் தாழ்த்தல் வேண்டா என இறைஞ்சியவாறு.