87

      87. அகக்கண் கொண்டு சிவனைக் காண்கின்ற வள்ளற்பெருமான், அவனது கழுத்துக் கறுத்திருப்பதும், அதன் வரலாறும் எண்ணிப் பார்க்கின்றார். எண்ணுந்தோறும், அப்பெருமானுடைய அருளின் பெருமை தோன்றி இன்பம் செய்கிறது. அந்நிலையில் அவர் உள்ளத்திற் கிடக்கும் பிழைகள் தோன்றி வருத்தம் தருகின்றன. இவ்விரண்டையும் இப்பாட்டிடைத் தொகுத்துப் பாடுகின்றார். 

2054.

     எந்தாயென் குற்றமெலாம் எண்ணுங்கால் உள்நடுங்கி
     நொந்தா குலத்தின் நுழைகின்றேன் - சிந்தாத
     காள மகிழ்நின் களக்கருணை எண்ணுதொறும்
     மீளமகிழ் கின்றேன் விரைந்து.

உரை:

     எந்தையே, என் குற்றங்க ளெல்லாவற்றையும் எண்ணிப் பார்க்குமிடத்து எனது மனம் நடுங்கி நொந்து கவலைக்குள் ஆழ்ந்து விடுகிறேன்; குன்றாத கடல்விடத்தை மகிழ்ந்தேற்ற நின் திருக்கழுத்தின் கருணையை எண்ணுந்தோறும் மீள மீள விரைந்து மகிழ்ச்சி எய்துகின்றேன். எ.று.

     உலகுயிர்க்கெல்லாம் அம்மையப்பனாதலால் சிவபெருமானை ”எந்தாய்” என இயம்புகின்றார். மக்களோடு உலகில் வாழ்பவர்கள் தம் குற்றத்தை முதற்கண் நோக்கிப் பின்பே பிறர் குற்றம் காண்டல் முறையென அறநூல்கள் கூறகின்றவெனின், குற்றமேயின்றிக் குணமே வடிவாய இறைவனது திருவருளை வேண்டுவார் தம்முடைய குற்றங்கள் அனைத்தையும் எண்ணி மனம் தூயராதல் வேண்டுமென்பது சொல்லாமலே பெறப்படும். அம்முறையில் வடலூர் வள்ளலார் தமது குற்றத்தை எண்ணுலுற்று, முதற்கண் நெஞ்சம் எய்திய வருத்தத்தை “என் குற்றமெலாம் எண்ணுங்கால் உள்நடுங்கி” நொந்தேன் என நுவல்கின்றார். நொந்தமனம் பின்பு எழுச்சியின்றிக் கவலையுள் ஆழ்ந்த திறத்தை, “நொந்து ஆகுலத்தில் நுழைகின்றேன்” என்று வருந்துகின்றார். கவலையாற் கையறவுபட்ட மனத்தைமீட்டு சிவன்பாற் செலுத்தி அவனது அருட்பெருக்கை எண்ணுகின்றார். அமுதம் வேண்டிக் கடல் கடைந்த தேவர்கட்கு இடையூறாக விட மெழுந்ததும், அது கண்டு அஞ்சி அவலித்த தேவர்கள்பால் இரக்க மிகுந்து அவ்விடத்தில் சிறிதளவும் சிந்தாமல் தான் வாங்கி மகிழ்ச்சி யோடு உண்டதை வியந்து ”சிந்தாத காளம் மகிழ்” என்றும், அதனை அவனது திருக்கழுத்து உள்ளே செலுத்தாமல் தன்னிடத்தே நிறுத்திக் கொண்ட அருட்செயலைப் பாராட்டி “காளமகிழ் நின் களக்கருணை” என்றும், அதனை நினைக்குந் தோறும் மேன்மேலும் உவகை மீதூர்வதையுணர்ந்து, “எண்ணுதொறும் மீள மகிழ்கின்றேன் விரைந்து” என்றும் வியந்து உரைக்கின்றார்.      இதனால், சிவனுடைய கண்ணும் கருத்துமேயன்றிக் கழுத்தும் கருணையுருவாயுளது எனக் கட்டுரைத்தவாறு.