88
88. உலகவரில் சிவனைப் பரவுவோரும் பழித்து இகழ்வோரும் உண்டு. இருவரையும் ஒப்ப நோக்கும் சிவனைப்
பார்க்கின்றார் வள்ளலார். பிறர் எள்ளி இகழ்வதையும் போற்றுதலாகக் கொண்டருள்கின்ற
பெருமானே, என்னை நீ நின் திருவருளில் நிறுத்தி வாழ்வித்தல் வேண்டும்; அவ்வாறு செய்யின், தள்ளத்தக்க
செயலென்று நினைந்து ஒதுக்காமல். சூழ்ந்து நின்று மகிழ்ந்து பாராட்டுவர் என்று இப் பாட்டில் வைத்துப்
பாடுகின்றார்.
2055. எள்ளலே என்னினுமோர் ஏத்துதலாய்க் கொண்டருளெம்
வள்ளலே என்றனைநீ வாழ்வித்தால் - தள்ளலே
வேண்டுமென யாரோ விளம்புவார் நின்னடியர்
காண்டுமெனச் சூழ்வார் களித்து.
உரை: இகழ்தலைச் செய்தாலும் அதனைப் புகழ்ந்து ஏத்துதலாகக் கொண்டு அருள் செய்யும் எமக்கு வாய்த்த வள்ளலே, என்னை நின் அருளில் வாழ்விப்பாயாயின், அதனை வேண்டாவென விலக்குக என்று யாரும் சொல்லமாட்டார்கள்; நின் அடியார் கூட்டமும் களிகூர்ந்து இறைவன் அருட்செயலைக் காண்போம் என்று சூழ்ந்திருந்து மகிழ்வர் எ.று.
எள்ளல - இகழ்ந்துரைத்தல். அன்பராயினார் வஞ்சப்புகழ்ச்சியாக இகழ்ந்து பாடுதலுண்டு; அதனை இகழ்வதாகக் கொள்ளாமல் மனமுவந்து ஏத்திப் புகழ்வதாகக் கொண்டு அருள் புரியும் பெருநலத்தை வியந்து கூறுகின்றமை தோன்ற “எள்ளலே என்னினும் ஓர் ஏத்துதலாய்க் கொண்டு அருள் எம்வள்ளலே” என்று புகழ்கின்றார். எள்ளி இகழ்ந்து குற்றம் புரியும் என்னையும் நினது இன்ப அருளில் இருத்தி வாழ்வித்தல் வேண்டும் என்று கூறுவாராய், “என்றனை நீ வாழ்வித்தல்” எனவும், அது பொருந்தாதச் செயல் என்று விலக்குவார் ஒருவரும் இல்லை என்றற்கு “தள்ளலே வேண்டுமென யாரே விளம்புவார்” எனவும் உரைக்கின்றார். அடியராயினார் அது கூறலாமே யெனின், அருள்வள்ளலின் திருவடி பரவும் செம்மனத்தராதலால், அப்பெருமக்கள் தள்ளல் வேண்டுமென்னாது மிக்க மகிழ்ச்சி கொண்டு, சிவபெருமானது திருவருட் செயலைக் காண்போம் எனச் சூழ்வந்து கண்டு பாராட்டுவர் என்பாராய், “நின்னடியர் காண்டுமெனச் சூழ்வர் களித்து” என உரைக்கின்றார்.
இதனால், இறைவனது அருட் பண்பு அவன் அடியார்பாலும் அமைந்திருப்பது கூறியவாறு.
|