89

      89. மதுரையில் சிவபெருமான் புலவனாய்த் தோன்றித் தருமி யென்னும் வேதிய இளைஞனுக்குப் பொற்கிழி வாங்கித் தந்த வரலாற்றை நினைக்கின்றார் வள்ளலார். ஏழைகட்கு இரங்கி யருளும் இச்செயலால் அவருக்குச் சிவன் திருவடியின்கண் மனம் ஒன்றிவிடுகிறது. அதுவே தமக்குக் கதியென்று இப்பாட்டிற் பெய்து உரைக்கின்றார்,

2056.

     வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா
     மாணிக்க மேகருணை மாகடலே - மாணிக்கு
     முன்பொற் கிழியளித்த முத்தேஎன் ஆருயிர்க்கு
     நின்பொற் கழலே நிலை.

உரை:

      சடையின்கண் கங்கையை வைத்திருக்கும் பொன்மலை போன்ற சிவபெருமானே, விலைமதிக்க வொண்ணாத மாணிக்கமணியே, அருட்கடலே, பிராமணச் சிறுவனுக்கு முன்னாளில் பொற்கிழியளித்த முத்தே, என்னுடைய அருமையான உயிர்க்கு நின்னுடைய அழகிய திருவடியே நிலையான இடமாகும். எ.று.

     'வேணிக்கு அம்வைத்த வெற்பு' என்றவிடத்து, வேணிக்கண் எனவரற்குரிய ஏழாம் வேற்றுமைக்கண் நான்காமுருபுவந்து, “கிழங்கு மணற்கீன்ற” என்பது போல மயங்கிற்று. அம்-நீர்; ஈண்டுக் கங்கையைக் குறிக்கின்றது. வெற்பே எனப் பொதுப்பட மொழிந்தமையின் பொன்மலை என்று கொள்ளப்பட்டது. சிவனது திருமேனி, “பொன்னார்மேனி” எனச் சான்றோரால் பாராட்டப்படுவது உலகறிந்த செய்தி. மாணிக்கம் - மணிவகை ஒன்பதனுள் செம்மணி; விலைக்கு விற்கப்படும் மாணிக்கமணியின் வேறுபடுத்தற்கு “விலையில்லா மாணிக்கமே” என்று விளம்புகின்றார். மாணி - மதுரையில் வாழ்ந்த வேதிய இளைஞன். பிராமணப் பிரமசாரியை மாணி என்பது வழக்கு. மாணி என்பது மாணாக்கன் என்பதன் சிதைவு எனக்கொள்வதுமுண்டு. “கொங்குதேர் வாழ்க்கை” எனத் தொடங்கும் பாட்டையெழுதித் தந்து பொற்கிழி பெறச் செய்த திருவிளையாடல் இங்கே குறிக்கப்படுகிறது. முத்து - மணிவகை ஒன்பதனுள் ஒன்று. பெறலருமை குறித்து உயிரை “ஆருயிர்” என்று சிறப்பிக்கின்றார். எடுத்த பிறவிகள் அனைத்தினும் நிலையாக நில்லாது பிரிந்து போந்தமையின், நிலையாய இடம் ஒன்று வேண்டுமென எண்ணியலைந்த தமக்கு இறைவன் திருவடியே நிலைத்த புகலிடமெனத் தெளிந்தமை விளங்க, “நின் பொற்கழலே நிலை” எனப் புகல்கின்றார்.

     இதனால், தன்னையடைந்தாரை மீளப் பிரிந்தேகாதபடி பிணித்து நிலைபெற நிறுத்துவது இறைவன் திருவடியாதலை எடுத்தோதி, அதனை அருள்க என்று வேண்டியவாறு.