90
90.
சிவபெருமானை நினைக்கும் போதெல்லாம் அவனுடைய அருட்பண்பே வள்ளலார் உள்ளத்தைக் கவர்ந்து
கொள்ளுகிறது. தன் திருவடிக்கண் அன்பு செய்பவர்க்கு உளவாகும் குற்றங்களைப் பொறுத்துக்
குணம்கொண்டு கோதாட்டி அருள் புரிவது சிவன் செயலாதலை எண்ணியும் சொல்லியும் இன்புறுகின்றார்.
அருள்புரியும் போதும் குறைபடலின்றி நிறைவுறச் செய்தருளும் நீர்மையை நினைந்து இப் பாட்டில்
அமைத்துப் பாடுகின்றார்.
2057. முத்தேவர் போற்று முதற்றேவ நின்னையன்றி
எத்தேவர் சற்றே எடுத்துரைநீ - பித்தேன்செய்
குற்றமெலாம் இங்கோர் குணமாகக் கொண்டென்னை
அற்றமிலா தாள்கின் றவர்.
உரை: திருமால் முதலிய தேவர் மூவரும் வழிபடுகின்ற முழுமுதற் கடவுளே, பித்துடைய யான் இவ்வுலகிற் செய்யும் குற்றங்கள் யாவற்றையும் குணமாகக் கொண்டருளி ஒரு குறையுமின்றி என்னை ஆள்பவர். நின்னையன்றித் தேவர் வேறே யாவர் உள்ளனர்? சிறிது எடுத்துரைப்பாயாக. எ.று.
திருமால், பிரமன், உருத்திரன் எனத் தேவர் மூவரையும் தொகுத்து “முத்தேவர்” என்று மொழிகின்றார். இவர்கட்குத் தோற்றமும் முடிவும் கூறப்படுதலால் “தேவர்” எனப் பாடுகின்றார். இவர்கட்கெல்லாம் முழுமுதற் பொருள் சிவம்; அதனால் அச்சிவப் பரம்பொருளை “முத்தேவர் போற்றும் முதற்றேவ” என்று மொழிகின்றார். “திகழும் திருமாலொடு நான்முகனும், புகழும் பெருமான்” (குடவாயில்) என ஞானசம்பந்தர் முதலிய சான்றோர் உரைத்தலால், “முத்தேவர் போற்றும்” என்றும், “உலகுகள் மலி குழுமிய சுரர் பிறர் மனிதர்கள் குலமலி தரும் உயிரவையவை முழுவதும் அழிவகை நினைவொடு முதலுருவியல் பரன்” (சிவபுரம். ஞானசம்) என்றும் கூறுகின்றமை காண்க. மணிவாசகப் பெருமான், “மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத்து எந்தை” என்பர். பித்துடையேன் என்பது பித்தேன் என வந்தது. பித்த வாதங்கள் பொருந்திய உடம்புடைமையால் பித்தேன் என்பது பொருத்தமாயிற்று. மலமாயைகளின் கலப்பால் உயிரும், பித்தவாதங்களின் மிகுதி குறைவுகளால் உடம்பும் நிலை பிறழ்ந்து குற்றம் செய்தற்கு இடம் உண்டாதல் புலப்பட, “பித்தேன் செய்குற்றம்” என்றும், இதனால் குற்றங்கள் தோன்றுதற்குக் காரணமாய் இடமளித்த மலமாயைகளும் பித்தவாத சிலேத்துமங்களும் உயிர்களின் படைப்பில்லவாதல் கண்டு குணமாகக் கோடல் பேரறிவுடையார்க்குப் பெருந்தன்மையாம்; அதனால், அப் பெருந்தன்மை நின் பாலன்றிப் பிறரிடத்தில்லை என்றற்கு, “நின்னையன்றி என்னை அற்றமின்றி ஆள்கின்றவர் எத்தேவர்” என்றும், ஒருவருமில்லை என்பது தோன்ற, “சற்றே எடுத்துரை” என்றும் இயம்புகின்றார். என்னை ஆளத்தக்கவர் முதற்கண் என் குற்றங்களைக் காரண காரிய முறையில் ஆராய்ந்து குணமாகக் கொள்ள வேண்டும் என்பது புலப்பட, “என் குற்றமெலாம் குணமாகக் கொண்டு” என்றும், மீளவும் குற்றம் செய்தற்கு வாய்ப்பின்றி ஆண்டருள வேண்டும் என்பது விளங்க, “அற்றமிலாது” என்றும் இசைக்கின்றார். குற்றம் செய்தற்குள்ள காரணவகைகளில் இடமும் ஒன்றாதலால், “இங்கு” எனல் வேண்டிற்று.
|