91

     91. சிவபெருமான் உமையொரு கூறனாய் இருப்பதை வடலூர் வள்ளல் கண்டு வியப்பு மேலிடுகின்றார். அப்பெருமானைப் பல பாட்டுக்களில் மகிழ்கின்றவர், “இறைவனே உமைநங்கைக்கு உன் உடலில் ஒரு கூறளித்து உய்ந்தோர் பரவி வழிபட விளங்குகின்றாய். அடியனாகிய யானும் என் உடலை இருகூறாக்கி இரண்டையும் என்னை வருத்தம் இடர்க்கு அளித்துள்ளேன்; உன்னைத் தொழுதுறையும் என் செயல் இருந்தவாறு இது” என்று பொருள்பட வள்ளலார் இப்பாட்டைப் பாடுகின்றார்.

2058.

     கங்கைச் சடையாய்முக் கண்ணுடையாய் கட்செவியாம்
     அங்கச் சுடையாய் அருளுடையாய் - மங்கைக்
     கொருகூ றளித்தாய் உனைத்தொழுமிந் நாயேன்
     இருகூ றளித்தேன் இடர்க்கு.

உரை:

     கங்கையாறு தங்கிய சடையையுடைய பெருமானே, மூன்று கண்களையுடையவனே, பாம்பை அழகிய கச்சாக அணிந்தவனே, அருளாளனே, உமாதேவியாகிய மங்கைக்கு உடம்பில் ஒரு கூறு அளித்தவனே, உன்னைத் தொழுதேத்தும் இந்த நாயனைய யான் துன்பத்துக்கு என் உடம்பின் வலம் இடம் என்ற இருகூறும் தந்துள்ளேன். எ.று.

     கங்கையாற்றின் பெருக்கைச் சடையில் ஒடுக்கித் தாங்குவது பற்றி “கங்கைச் சடையாய்” என உரைக்கின்றார். ஞாயிறு திங்கள் என்ற இரண்டையும் இயல்பாக அமைந்த கண்களாகவும்,. நெருப்பை நெற்றிக் கண்ணாகவும் கொண்டிருத்தலால் முக்கண்ணுடையாய் என்று மொழிகின்றார். கயிறு போறலின், பாம்பைக் கச்சாக அணிந்த நலம் நோக்கிக் “கட்செவியாம் அங்கச்சுடையாய்” என்றும், கங்கை முதலாயவற்றைத் தான் மேற்கொண்டமை அருட்குறிப்பாதல் தோன்ற “அருளுடையாய்” என்றும் இயம்புகின்றார். பிரியா நிலைமை வேண்டிய உமை நங்கைக்கு உடம்பின் இடப்பாகத்தை யளித்தமை பற்றி, “மங்கைக்கொரு கூறளித்தாய்” என்று சொல்லி, நோய்கள் பல தமது உடம்பு முற்றும் பற்றிப் பரவித் துன்பம் செய்கின்றமை விளங்க, “நாயேன் இடர்க்கு இரு கூறு அளித்தேன்” எனப் புகல்கின்றார். இடர்; ஈண்டு நோய்மேல் நின்றது. நல்ல மங்கைக்கு நீ ஒரு கூறளித்தாயெனின், பொல்லாத நோய்க்கு நான் இரு கூறளித்தேன் என்பது ஒரு நயம். ளுன்னை நாளும் தொழுதெழும் அடியனாகலின், அளிக்க முன் வந்தேன் என்றும் நல்லறிவில்லா நாயேனாதலால் நோய்க்கு இருகூறளித்தேன் என்றும் கூறுகின்றார்.

     இதனால், பெறுவோர் தகுதியறியாது ஒரு கூறுக்கு இரு கூறளித்த சிறுமைத் தன்மை புலப்படுத்தவாறு.