92

      92. சிவனடியார் திருக்கூட்டம் தன்னைக் காணின் அன்புடன் தழுவிக்கொள்ளுவதை வள்ளலார் காண்கின்றார். அல்லாதார் கூட்டம் அவரைக் காணும்போதும் எள்ளி இகழ்ந்துபேசக் காண்பதேயன்றி தத்தமக்குள் பேசிக் கொள்வதையும் கேள்வியுறுகின்றார். இக்கூட்டங்களிற் கலந்து கொண்டால், அவர்களோடு யாது பேசுவது என்றும், அவர்கள் விலகிச் சென்றால், அதற்குத் தன்பால் காணப்படும் பிழைாதொன்றும் தெரியவில்லை. அவர்களுடைய பேச்சும் செயலும் கண்ட விடத்துக் கருத்து விளங்காமையால் வள்ளலார் பேதுறவு எய்துவார்; அது குறித்து நாணுவது முறையாகவும் அதனையும் அவர் செய்வதிலர். அவர்கள்பால் காணப்படும் குணத்தைக் காணவும் கண்டு வியக்கவும் தெரிவதில்லை. இவற்றைச் சொல்லி முறையிடக் கருதி வள்ளற் பெருமான் இவ் வெண்பா வாயிலாக எடுத்துரைக்கின்றார்.

2059.

     பேசத் தெரியேன் பிழையறியேன் பேதுறினும்
     கூசத் தெரியேன் குணமறியேன் - நேசத்தில்
     கொள்ளுவார் உன்னடிமைக் கூட்டத்தார் அல்லாதார்
     எள்ளுவார் கண்டாய் எனை.

உரை:

     பெருமானே, யாவரோடும் இனிது பேச அறியேன்; செய் பிழையைத் தெளியும் அறிவில்லேன்; பிழை காட்டக் கண்டு அறிவு பேதுறும்போது உடல் நாணவும் அறியேன்; குற்றங்களைப்போல் குணமாவனவற்றையும் தெரியேன்; உன் அடியராகிய கூட்டத்தார், அன்பினால் என்னைத் தம்மிடையே சேர்த்துக் கொள்ளுகின்றார்கள்; அல்லாதார் என்னைக் கண்டு இகழ்கின்றார். எ.று.

     கேட்போர் சொற்பொருளை இனிதறிந்து கொள்ளுமாறு பேசுவதுதான் பேச்சாகும்; அந்த வன்மை தம்பால் இல்லாமை கூறுவார், “பேசத் தெரியேன்” என்றும், பேச்சிலும் செயலிலும் உண்டாகும் பிழைகளைத் தேர்ந்தறிந்து போக்கும் திறமின்மை புலப்படப் “பிழையறியேன்” என்றும் உரைக்கின்றார். பிழையறியமாட்டாமை கண்டு பிறர்கண்டு காட்டிய வழி நாணமுண்டாதல் இயல்பாகவும், தன்பால் அது தோன்றாமை பற்றி, “பேசுறினும் கூசத் தெரியேன்” என்றும், நாணம் பிறத்தற்கு முன் அறிவின்கண் கலக்கமுண்டாவது பற்றி, “பேதுறினும் கூசத்தெரியேன்” என்றும் கூறுகின்றார். குற்றம் அறியாவிடின் குணம் கண்டு மகிழலாமேயெனின், அந்த அறிவும் இல்லாமை தோன்றக் “குணமறியேன்” எனக் குறிக்கின்றார். குணமும் குற்றமும் தெரிந்துணரும் திறமில்லாத தன்னை அடியார் கூட்டம் தன்னகத்தே தழுவிக் கொண்டிருப்பதற்கு ஏது இது வென்பாராய், “நேசத்திற் கொள்ளுவார் உன்னடிமைக் கூட்டத்தார்” என்றும், அடியரல்லாதார் அன்பிலாதவராதலின் என்னைத் தம்மிற் சேர்க்காது இகழ்ந்து போக்குவார் என்றற்கு “அல்லாதார் எனை எள்ளுவார்” என்றும் இயம்புகின்றார். கண்டாய் - முன்னிலை யசை.

     இதனால், அறிவிலாரையும் அன்பால் தழீஇக் கொண்டமைதல் அடியார் செயல் எனத் தெரிவித்தவாறு.