93
93. இறைவனே, சிவம் பயக்கும் நின்
திருவடியே முடிபொருள் என்று சான்றோர்கள் அறிவுரையாலும் நூலுரையாலும் கேட்டும் அறிந்தும் நான்
நம்புவதில்லை. அதனால் நின் திருவடிதான் பொருள் என்று அறியேனாயினேன்; அதுபற்றி நாணத்தக்க
யான் நாணாமல் நாடோறும் ஊணும் உடையுமே வாழ்க்குரிய பொருள் என்றும்
துணிந்து நல்ல நாட்கள்
பலவற்றையும் வீணாகக் கழிக்கின்றேன் என்று இப் பாட்டால் முறையிடுகின்றார்.
2060. ஊணே உடையேஎன் றுட்கருதி வெட்கமிலேன்
வீணேநன் னாளை விடுகின்றேன் - காணேனின்
செம்பாத மேஎன்றுந் தீராப் பொருளென்று
நம்பாத நாயடியேன் நான்.
உரை: சிவபெருமானே, நின்னுடைய செம்மையான திருவடியே விடலாகாப் பொருள் என்பதை நம்புதல் இல்லாத நாயடியேனாகிய நான், உணவு, உடை யாகியவற்றையே உள்ளத்தில் கருதிக்கொண்டு, வெட்கமின்றி நல்ல நாட்களை வீணே கழிக்கின்றேன்; இனி உய்யும் நெறியும் அறிகிலேன். எ.று.
'செம்பாதம்' என்றற்குச் சிவந்த தாமரை போன்ற பாதம் எனப் பொருள் கூறுவது மரபு . செம்மையேயாய சிவபதம் அருளும் திருவடியாதல் பற்றிச் செம்பாதம் என்றார் என்றல் சிறப்பாம். தீர்தல் விடற் பொருளதாகலின் பொருளல்லவென விடலாகாப் பொருள் என்ற கருத்துப்படத் “தீராப்பொருள்” என்று கூறுகின்றார். உலகியற் பற்றுக்களை விடல் வேண்டுவோர் பற்றும் பற்றெனச் சான்றோர் அறிவுறுத்துவும் மனங் கொள்ளாமை நோக்கி “தீராப்பொருள் என்று நம்பாத நான்“ என நவில்கின்றார். “பற்றுக பற்றற்றான் பற்றினை, அப் பற்றைப் பற்றுக பற்று விடற்கு” (350) எனத் திருக்குறள் வற்புறுத்துவது காண்க. “பற்றாங்கவையற்றீர் பற்றும் பற்று ஆங்குஅது” எனத் திருவாசகம் (உயிருண்.) தெளியவுரைக்கின்றது. நாயினும் கடைப்பட்ட அடியேன் என்றற்கு நாயடியேன் என்கின்றார். அறிவுடையோர் அறிவுறுத்த ஞானவுரையை நம்பாமையால் மனம் வெறுவிதாகி ஊணும் உடையும் பற்றிய எண்ணமே நிரம்பி நின்றமையின் “ஊணே உடையே என்று உட்கருதி” என்றும் அக் கருத்து, அறிவுடையோர் எய்துதற்குரிய உறுதிப் பொருளதாகமை யறிந்தவிடத்து நாணம் எய்தினும் அதனை எண்ணாதொழிந்தமை நினைந்து “வெட்கமிலேன்” என்றும் நொந்து கொள்ளுகின்றார். ஊணுடை நோக்கி நின்ற உள்ளம் நின்ற உள்ளம் தெளிவுற்றுத் திருவடிப் பேற்றை நயந்து முயலுதற்கு இருள்நீக்கி ஒளிசெய்யும் ஒவ்வொரு நாளும் நல்ல வாய்ப்பு நல்குவது கண்டு “நன்னாள்” என்றும், அந்நாளால் பெறக்கடவ நலத்தைப பெறாது இழந்தமை புலப்பட “வீணே விடுகின்றேன்” என்றும் உரைக்கின்றார். சென்ற நாள் மீள வாராமை பற்றி, “விடுகின்றேன்” என விளம்புகின்றார். இனியேனும் திருவடியே பொருளெனக் கொண்டு உய்யலாம் எனின், “அதற்குரிய நெறியறிகிலேன் என்பாராய்க் “காணேன்” என்று கூறுகின்றார்.
இதனால், திருவடியே பொருளாவதென்பதை நம்பாமல் உண்டி யுடைமைகளையே நம்பி உய்திறம் இழந்தமைக்கு வருந்தியவாறு.
|