94

      94. உயிர்கள் வழிபட்டு உய்தி பெறும்பொருட்டு “நவந்தருபேதம் ஏக நாதனே நடிப்பன்” என்று சிவஞான சித்தியார் தெரிவிப்பதை வள்ளலார் சிந்திக்கின்றார். இந்நாடகம் இறைவன் கருணைச் செயலாதலையும் நோக்குகின்றார். அவ்வியல்பால் அப் பெருமான் உயிரறிவில் அருளால் மன்னியிருப்பதும் தெளிக்கின்றார். அத் தெளிவை இப்பாட்டின் கண் தொகுத்துப் பாடுகின்றார்.

2061.

     சிவமே சிவஞானச் செல்வமே அன்பர்
     நவமே தவமே நலமே நவமாம்
     வடிவுற்ற தேவேநின் மாக்கருணை யன்றோ
     படிவுற்ற என்னுட் பயன்.

உரை:

     சிவபரம்பொருளே, சிவஞானத்தால் விளையும் செல்வமாக விளங்குபவனே, அன்புடையார்க்குப் புத்தின்பம் நல்குபவனே, தவம் செய்தார்க்கு அதன் பயனாக உள்ளவனே, நலமே யுருவாயவனே, ஒன்பது வகையான உருவம் உடையவனே, நின் திருவருளில் என்னுள்ளம் படிவது நினது பெருங்கருணையாலாகும். எ.று.

     ஞானமே வடிவாயமைந்தமையின் “சிவமே” என்றும், சிவஞானத்தால் நுகரப்படும் போகமாதல் விளங்கச் செல்வமே என்றும்,. அன்பர்கட்கு அன்பு வடிவாய் இன்பமருளுதல் கொண்டு “அன்பர் நவமே” என்றும் இயம்புகின்றார். நவம்- புதுமை. தவம் செய்வார்க்குத் தவத்தின் பயனாய் அருள் செய்வது பற்றித் தவமே எனவும், நலத்தின் உருவாய்த் தன்னை வழிபடுவார்க்கு எல்லா நலங்களையும் தருவது பற்றி நலமே எனவும் உரைக்கின்றார். நவமாம் வடிவு, உருவம் நான்கு, அருவம் நான்கு, அருவுருவம் ஒன்று என நிற்கும் ஒன்பது. அருவம் நான்கையும் சிவம் சத்தி நாதம் விந்து எனவும், உருவம் நான்கையும் ஈசன், உருத்திரன், மால், அயன் எனவும், அருவுருவத்தைச் சதாசிவன் எனவும் அருணந்தி சிவனார் (சிவ. சித்தி. II 74) கூறுவர். பரம்பொருள் ஒன்றே இவ்வொன்பது வடிவு கொள்வது பற்றி “நவமாம் வடிவுற்ற தேவே” என உரைக்கின்றார். அவன் அருளாலன்றி உயிர்கள் சிவஞான இன்பத்தில் திளைத்தல் இல்லாமையால், “நின்மாக் கருணையன்றோ, படிவுற்ற என் உட்பயன்” என்று இயம்புகின்றார்.

     இதனால், அவன் அருளால் அவன் அருளின்பத்தில் தோயும் திறம் கூறியவாறு.